சொல்வரை

வந்து வீழும் சொற்க ளுக்கு 
     வரைய மைக்க முடியுமா? - அவள் 
வாழ்த்திச் சேர்க்கும் பாட லுக்கு 
      மறுப்பு சொல்ல இயலுமா? 
சந்த நயமும் துள்ளும் நடையும் 
      கவிதை வந்து கொட்டவே - அதைச் 
சற்று நேரம் கழித்து வரச் 
      சொல்லு வதுவும் நியாயமா? 

மூக்கு வழியில் சுவாசக் காற்று 
      வந்து வந்து சென்றிடும் - அம் 
 முயற்சி யோடு கவிதை நேரும் 
      நிலையை வைத்துப் பார்த்திடில்,
வீச்சில் கூட மூச்சு போல 
      வீர மாக பாயுமே - அது 
 விளை யாடித் தலை யாட்டி 
      விந்தை பலவும் ஆக்குமே! 

எந்த நேரம் கவிதை நேரும் 
      சொல்லு வோர்கள் எங்குளார்? - அதன் 
 ஏக்க மென்ன நோக்க மென்ன 
      கண்ட வர்கள் எங்குளார்?
வந்து போகும் மின்னல் கீற்றை 
      வகைப்ப டுத்த முடியுமா - மனம் 
 வார்த்தை மழையைச் சிந்து கையில் 
      கோத்தி டாமல் விடியுமா?

யார்கொ டுக்கும் விந்தை பாட்டு? 
      யாருக் கேனும் தெரியுமா? - அதை 
 யாண்டும் வந்து யிர்ப்ப தென்ன 
      எவரும் சொல்ல முடியுமா? 
போர்கொ டுக்கும் புயல்கொ டுக்கும் 
     புரள வைக்கும் பாடலே - வெளி 
 போந்து விட்டால் பேறு கண்ட 
     சுகம்கொடுக்கும் பாடலே !! 

வாயெ டுத்துப் பாடப் பாட 
    வந்த சேரும் பாடலே - பிறர் 
 வாழ்த்தெ டுத்து ணர்ந்து நோக்க 
     வாழ்க்கையாகும் வாழ்க்கையே! 
தாயெ டுத்து நல்கும் பாடல் 
     சேயெடுத்துப் பாடுவோம்! - செந் 
  தமிழெ டுத்துச் சுவையெ டுத்துக் 
     கவியெடுத்து பாடுவோம்!! 

-விவேக்பாரதி 
24.07.2017

Comments

Popular Posts