தொடாமல் மலர்வில்லை

இருக்கும்போது இன்பமும், இல்லாதபோது துயரும் தரும் உவமையுடன் எழுத வேண்டும் என்ற குறிப்புக்கு சங்கப்பாடல் சாயலில் எழுதப்பட்டது.

விழலின் நீரென வீணாய்ச் செல்லும்
நிழலனை காலம், நீட்டிடுங் கையில்
அடைபடுந் தொடுதிரை தொடமலர்ந் திடுமே
தொடுதிரை யில்லாப் பொழுதுகள் துயரே!
ஈதென் இயல்நிலை தோழி
நாதன் விரலென நான்தொடு திரையே!!


கருத்து: 

கைகள் நீட்டிப் பார்த்தால் உடனே அகப்பட்டு, கைகளுக்குள் அடைபடும் தொடுதிரைப் பேசி (Touch screen phone), விரல்கள் தொடத் தொட மலர்ந்திடும். இப்போதுள்ள காலத்தில் அந்தத் தொடுதிரைப்பேசி இல்லாத நிழல் போன்ற  நேரங்கள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீராக யாருக்கும் பயன்படாமல் சென்று கொண்டிருக்கிறது. இதனைப் போலத்தான் என் நிலைமையும். என் காதலன் வந்து நான் தொட்டால் மலர்ந்து இன்பமடைவேன்.  எப்படி விரல் தொடாத தொடுதிரைப்பேசி உறங்கும் நிலைக்கு (Sleep mode) செல்லுமோ அதனைப் போல நானும், அவன் வாராமல் வாடி மூடி இருண்டு கிடக்கின்றேன். என் காதலன் தான் விரல். நான் தான் தொடுதிரைப் பேசி. இதனை அறிந்துகொள் என் தோழியே.

-விவேக்பாரதி 
18.12.2017

Comments

Popular Posts