ஒரு மாலைப் புலம்பல்


பிள்ளைப் பிராயக் காதலைத் தொலைத்தவள் கூந்தல் முடிக்கையில் வரும் பெருமூச்சு இப்பாடலாக உருவெடுக்கிறது...

தெக்கு தெச பாத்து வந்த
தென்றல் காத்து,
திக்கு தெச தெரியாம
தொலஞ்சதென்ன?


அக்கம் பக்கம் பாத்து வந்த
மின்னல் கீத்து,
ஆளாகிப் போன பின்னே
மறஞ்சதென்ன?

கையப் புடிச்சதும் கட்டி அணச்சதும்
கனவுல வருதே
தெனந்தெனம் கவிதயத் தருதே!

அடக்
காலக் கிறுக்குல கோரஞ் சகிக்கல
காத்து கூட சுடுதே
மனசு கண்ணீர் விட்டழுதே!

கோழிக் கூட அரிசி அள்ளி
கொதிக்க வெச்சிருந்தோம்!
கொட்டாங்குச்சி பாத்திரத்துல
கொழம்பு செஞ்சிருந்தோம்!

கூட்டுச் சோத்துக் காதலுல
கூட இருந்தவன
நான் கூப்புடத்தான் பாக்குறேன்
கொரலும் இல்லையே!

ஓலக் கீத்துல தாலி முடிஞ்சப்ப
ஒண்ணாத்தான் திரிஞ்சோம்!
அப்போ என்னத்த அறிஞ்சோம்?

இப்ப
ஊரு புரிஞ்சதும் உறவு தெரிஞ்சதும்
ஒட்ட வழியில்லையே
ஒரு ஓரம் எடமில்லையே!

சாயங்கால சாதி மல்லி
பாத்து சிரிக்கிறதும்,
சாமத்துல வெண்ணிலவு
கேலி பேசுறதும்,

தூரமுள்ள மாமனுக்குத்
தெரிவதுமில்லே,
காதல் துக்கப் பட்ட கன்னி மனசு
தேர வழியுமில்லே!!

-விவேக்பாரதி
15.12.2017

Comments

Popular Posts