ரசிகை முகம்

ஒரு ரசிகையின் முகத்தைத்
தேடுகிறேன்! 
 
மனத்துக் கிடங்கில்
மண்டிக் கிடக்கும்
உணர்ச்சிப் பிழம்புகள்
உதிர்க்கும் சொற்களை
அப்படியே
தன் அகத்தில் வாங்கி
நான் உணர்ந்தன எல்லாம்
தான் உணர முற்படும்
அந்த ரசிகையின் முகத்தைத்
தேடுகிறேன்!

பாடிக்கொண்டே இருக்கும்
என் பாவ மனதும்
சாய்வதற்காக ஏங்கும் 
ஜன்னல் ஓரமாய்த்
தன் மனத்தைக் கொடுத்து
என் அருகில் அமர்ந்து
தலை கோதிக் களிக்கும்
அந்த ரசிகையின் முகத்தைத்
தேடுகிறேன்!

சில சில சொற்பதம்
சில சில கற்பனை
எனக்குத் தோன்றிய மறுகனமே
என் கவிக்கு வரும் முன்
அவள் செவிக்கு எட்டி
"சபாஷ்" என்ற
முதற் பாராட்டோடு
எழுதும் கைக்கொரு
செல்ல முத்தம் கொடுக்கும்
புது ரசிகையின் முகத்தைத்
தேடுகிறேன்!

என்னைப் போலவும்
என்னை மிஞ்சியும்
என்னில் குறைந்தும்
சமயங்களில்
என்னையும்
கவிதையாய்க் கவிதைபோல்
ரசிக்கும்
ஒரு ரசிகையின் முகத்தைத்
தேடுகிறேன்!

அவளோ,
கண்களில் பொய்த்திரை
களையாதிருக்கும் என்னைத்
தூரமிருந்தபடி ரசித்துவிட்டு
அருகி வர பயந்து
அப்படியே உறைந்து
காற்றோடு போகிறாள்
இன்னொரு எழுதாக் கவிதையென!!

தேடலில்....
விவேக்பாரதி
18.12.2017

Comments

Popular Posts