மாணுடைய சக்தி

வானிருக்கும் சொர்க்கபதி வாசம் - அன்னை
   வண்ணமடி கொண்டிருக்கும் வாசம்
தேனிருக்கும் பூவெனச்சு வாசம் - என்றன்
   தேவையெலாம் தீர்ப்பதவள் பாசம்!
ஊனிருக்கும் உள்ளமது நாசம் - அது
   உமையம்மை நினைப்பால்ப்ர காசம்!
ஏனிருப்ப தென்னுமெண்ணம் வீசும் - அதை
   எத்திப்பயன் காட்டும்சக வாசம்!!

ஓரிடத்தில் அன்னையென நிற்பாள் - மற்
   றோரிடத்தில் தோழியென நிற்பாள்
மாரிடத்தில் காதலிபோல் சாய்வாள் - அவள்
   மறுகணத்தில் மடிச்சிறுமி யாவாள்
யாரிடத்தும் பேசாத தெல்லாம் - தனி
   யாழிசைபோல் என்காதில் சொல்வாள்
போரிடத்தைப் போலூடல் செய்வாள் - அன்னை
   போக்கினிலே புதிர்பரப்பி உய்வாள்!!

காணுமிடந் தோறுமவள் தோற்றம் - இசைக்
   கவிதையெலாம் காளிகுழல் நாற்றம்!
பூணுமிள நெஞ்சகத்தில் ஆட்டம் - செயும்
   புண்யவதி! தந்திடுவாள் ஊட்டம்!
நாணுமழி வோடிவழி நோக்கம் - அதை
   நம்பியவர் கண்ணுவந்து பார்க்கும்!
மாணுடைய சக்தியவள் திண்ணம்! - மட
   மனமகற்றத் தோன்றுமிந்த எண்ணம்!!

-விவேக்பாரதி
02.12.2017

Comments

Popular Posts