சித்தக் கனவு

கண்மூடிக் கட்டிலிலே கனவோடு சாய்ந்திருக்கப்
பண்பாடும் நெஞ்சகத்தில் பாழாக ஒருகேள்வி
கேட்டது ! நெஞ்சம் கிளர்ந்தது ! கேள்விதனைக்
கேட்டவரார் அஃதறியேன்! கேள்விமட்டும் எதிரொலியாய்!!
உண்மைக்குப் பொருளென்ன? ஊர்வாழ வழியென்ன?
பெண்மைக்கு விடையென்ன? பேரழகுந் தான்என்ன?
என்றெல்லாம் கேட்டிருந்தால் ஏதேனும் கவிசொல்லி
மன்றத்து முன்னவரின் மரியாதை உரைசொல்லி
தூங்கி இருப்பேன்! தோன்றிவந்த கேள்வியதோ
ஏங்கிட வைக்கும் எக்காளக் கேள்வியம்மா!
என்தேவை யாதென் றென்னை யாரோ
தன்தேவை தீரத் தடுத்தங்கு கேட்டுவிடத்
தேவையென்று நானெதனைத் தெளிந்துரைப்பேன் தெய்வதமே!!
தேவையென்றால் யாதென்றே தெரியாத பிள்ளையன்றோ!!
விட்டில் பூச்சிக்கு விளக்கொளிதா னேதெரியும்!
சிட்டுக் குருவிக்கு சிறுநெல் தானேதெரியும்!
பாடசாலை பயில்கின்ற பச்சிளம் பாலகனைத்
தேடலரும் வேதாந்தம் சித்தாந்தம் என்றெல்லாம்
பெருங்கேள்வி கேட்டுவிட்டால் பேதை என்செய்வேன்!
குரங்குக்குக் கீதைக் குணமூட்டல் சாத்தியமா?
கண்கட்டிக் காதலனைக் காட்டுக்குள் விட்டதுபோல்,
பண்கூட்ட மறந்ததொரு பாடகனின் மேடைபோல்,
அச்சம் எதிலும் அச்சமயம்! அச்சமயம்,
உச்சிக் குடுமியை உயரே பிடித்திழுத்துக்
காதைத் திருகிக் கனிவான கொட்டுவைத்து
எழுப்பி விட்டதொரு ஏகாந்த அருட்சோதி!
ஆகாச மார்க்கத்தில் ஆழ்ந்துவந்த நற்ஜோதி!
ஏகாரம் சேர்கவிபோல் எழும்பிவந்த பொற்சோதி!
"ஏடா பிள்ளாய்! எழுத்தறிவும் பெற்றிலையோ
மூடா! முன்னவர்கள் மொழிந்தனவும் கற்றிலையோ?
நின்தேவை விளம்ப நிமிடங்கள் பலநூறோ?
என்கேள்விக் கதுசொல்" என்றென்னை அதட்டிடவே
ஒன்றும் புரியாமல் ஓரசைவும் காட்டமல்
வன்புலியைக் கண்டவொரு வளையெலிபோல் காட்டுக்குள்
சிங்கத்தைக் கண்டவொரு சிறுநரிபோல் நின்றிருந்தேன்!
அங்கதற்குள் ஒருமாற்றம் அண்டிப் பயங்கொடுக்கச்
சட்டென்று விழித்தேன் சகலமும் பின்னறிந்து
பட்டென்று பேனாவைப் பாசத்தோ டெடுத்ததற்குச்
செல்ல முத்தங்கள் சிலவிட்டு வாழ்த்திட்டு
வெல்லத் தமிழணங்கை வென்று தொழுதிட்டு
தேவை யாதென்று தெளிவாய் எழுதவந்தேன்!
"தேவை தெரிந்துவிட்டால் தேவனாகிப் போவேனே!"
அதற்குள் இன்னுமொரு அழகான இளம்பெண்ணாள்
பதுமை, சிரிக்கின்ற பால்குடம்! இதழ்ச்சிவப்பால்
என்னை அழைக்க எழுதவந்த கதைமறந்து
மின்னேர் உடல்புல்லி மீண்டுமீண்டும் முத்தமிட்டு
மோகப் பெருமயக்கில் மொத்தமும் மறந்ததுபோல்!
ஏகக் காதலே இதயமெலாம் நின்றதுபோல்!
உச்சக் கலைதொட் டுடல்விட்டு வானுலக
எச்சம் அடைந்தேன்! ஏராளப் பறவைகள்
கூடி முயங்கிக் குதிக்கும் விசும்பிடையே
பாடி மகிழ்ந்தேனப் பாவை கைவிலகப்
பதறி விழித்தேன் பார்வை திருத்திச்
சிதறிய விழிக்கோணம் சிந்தாமல் சேர்த்து
மணிபார்த்தேன்! மணியெட்டு மயக்கம் தீர்ப்பதற்காய்க்
கனிந்த காலை,"சித்தக் கனவென்று சொல்லியதே!!

-விவேக்பாரதி
09.11.2017

Comments

Popular Posts