மரகதப் பஞ்சகம்
எப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்....
மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள்
நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந்
திறந்தது வெள்ளி சிரித்தது தாளில்
பிறந்ததிப் பாட்டுப் படை!
பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய்
பார்க்கவோ தங்கமானாய்
பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற
பாவலர்க் கொளியாகினாய்!
நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில்
நலம்சூடப் பாடியாடும்
நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர
நாணத்தில் மையலாகினாய்!
இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு
கையனின் வேலாகினாய்!
இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும்
இதழோரம் பாலாகினாய்!
மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற
மண்ணாதி மன்னரரசே!
வளமான மதுரையின் இளமானெ னத்திகழ்
மரகதமே மீனாட்சியே!!
செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில்
சேயாய்த் தவழ்ந்தவள் நீ!
செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும்
செம்மாந்து நிற்பவள் நீ!
தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி
தமிழ்பாடுங் கிளியாகிடத்
தாராள மானகரம் தந்தவனின் பாடல்சுகம்
தினந்தோறும் கேட்பவள் நீ!
சந்திரனெ ழுந்திடவும் அபிராம பட்டன்சொல்
தமிழுக்குள் ஓடினாய் நீ!
சமயத்தில் ஆழ்வாரும் நாயன்மா ரும்சொல்லும்
சத்திய வாக்கெலாம் நீ!
மந்திரமெனப்பழமைக் கவிகள் பிறந்துவர
வரிதந்த அறிவின் அறிவே
வளமான மதுரையின் இளமானெ னத்திகழ்
மரகதமே மீனாட்சியே!!
கண்முன்னம் நீவந்து காணாத காட்சிகளைக்
கருவேற்றி விட்டதென்ன?
கழுதைக்கும் உன்னுடைய முழுதைத் திறந்துதவிக்
கணக்காகக் கேட்பதென்ன?
உண்மையின் ஆழத்தை அறிவிக்கு நாடோறும்
உள்நின்று செய்வதென்ன?
ஊமையனை நீவந்து பாடல்தர வேசொல்லி
உயிர்நீவி நிற்பதென்ன?
வண்ணத்தை எனதாக்கி வடிவத்தை உனதாக்கி
விளையாடும் சேட்டையென்ன?
வானத்தை நெஞ்சிற்றி றந்தேயிவ் வையத்தை
வாழ்த்தப் பணிப்பதென்ன?
மண்ணுக்குள் எனைவைத்து மனதுக்குள் உனைவைத்து
மறைகின்ற சிறுதோழியே
வளமான மதுரையின் இளமானெ னத்திகழ்
மரகதமே மீனாட்சியே!!
சரணத்தை நின்பத்ம பாதத்தில் வைத்திங்கு
சரிக்கிறேன் என்னை நானே!
சாகசம் அறியாத பாமரன் உண்மையால்
தவிப்பவன் இங்கு நானே
மரணத்தை வெல்கின்ற சித்தெலாம் வேண்டாத
மழலையின் உருவம் நானே
மல்யுத்தம் போல்நெஞ்சில் சொல்முத்தம் சேர்க்கவே
மன்றாடும் கவிஞன் நானே
கருணைக்கு வான்பார்த்து மழைபார்த்து வாழ்கின்ற
கதிர்விளையும் மண்ணும் நானே
காலத்தின் ஓட்டத்தில் என்னுடைய குதிரையைக்
கண்பார்க்க நிற்கிறேனே
வரமென்னும் கரம்தூக்கிப் பரமென்னும் கதிசேர்க்க
வருகின்ற தெய்வ நிதியே
வளமான மதுரையின் இளமானெ னத்திகழ்
மரகதமே மீனாட்சியே!!
தேவாதி தேவர்கள் கூட்டத்தில் சேர்த்திடென்
தேவையே நீ ஆகிடு!
தேய்வற்ற வெண்ணிலா போலென்றன் புன்னகை
தெரியும்படியே செய்திடு!
நாவார நாடோறும் நான்பாட நீகேட்டு
நன்றெனத் தலையாட்டிடு
நானெங்கு சென்றாலும் நீயங்கெலாம் வந்து
நல்லரண் தான்கூட்டிடு!
பூவாடை மேனியில் மடியென்னும் மூலையில்
பூவாய் எனைச் சேர்த்திடு,
புரியாத பந்தத்தில் இறுகாமல் சொந்தங்கள்
புகலும் வண்ணம் வைத்திடு,
மேவாமல் உன்பாதம் பிரியாமல் வாழ்கின்ற
மேனிலை தருக உமையே
வளமான மதுரையின் இளமானெ னத்திகழ்
மரகதமே மீனாட்சியே!!
-விவேக்பாரதி
மேலும் படங்கள்
Comments
Post a Comment