மக்கள் கவிஞன் மணிவிழா

2016 ஆம் ஆண்டின் பாரதி திருவிழாவுக்கு எழுதிய அழைப்புக் கவிதை.

விண்வி ளக்குகள் ஆயிரம் வைப்பீர் !
  விந்தை மிக்கதாய்ப் பந்தலுந் தைப்பீர் !
வண்ண சத்திரங் கோடிய மைப்பீர் !
  வழியெ லாம்நிழற் குடைகள்ச மைப்பீர் !
கண்க வரந்திடும் வண்ணமா யிங்கே
  கருத்து மிக்கநல் வாசகப் பலகை
எண்ணி லாதன கொண்டுகு விப்பீர்  !
   எங்கும் முரசமே மழங்கிடச் செய்வீர் !

நெஞ்சி லின்பமே பொங்கிடத் துள்ளி
   நித்த மாடுவீர் ! நெய்குழல் மகளீர் !
கொஞ்சும் வளையல் குலுங்கச் சிரிப்பீர் !
   கொவ்வைச் செவ்விதழ் குவிய நகைப்பீர் !
அஞ்சா தென்றும் ஆண்தொழில் பழகும்
   அரிய ஆடவர்த் தோழரே சேர்வீர் !
விஞ்சு மமுதம் விளைகவே யென்று
   விசைமி குங்கரங் கொட்டிந டிப்பீர் !

மக்கள் கூட்டமே மன்னிடச் செய்வீர் !
   மருங்கெ லாமுயர்க் கொடிகள் பிடிப்பீர் !
தக்க விடங்களில் மேடைய மர்த்தித்
   தமிழில் ஆயிரங் காணமி சைப்பீர் !
துக்கம் யாவுமே நீங்கிடு மென்று
   துள்ளித் துள்ளியெ ழில்நட மிடுவீர் !
திக்கெ லாங்களி பரவிட ஆர்ப்பீர் !
   திண்ண மிக்கதாய்க் கவிதைகள் வார்ப்பீர் !

சுத்த ஞானமும் ! சுதந்திர வாழ்வும் !
   சுட்டெ ரித்திடும் தீச்சுடர்ச் சொல்லும் !
நித்த மின்பமே நினைத்திடும் நெஞ்சும் !
   நீதி மட்டுமே எண்ணும்நல் லறிவும் !
பக்தி மார்க்கமும் ! பாசெயும் துணிவும் !
   பாரி லுள்ளநாம் பெற்றன மென்றால்
அத்த னைத்திறம் தந்தவன் என்றன்
   அப்பன் பாரதி பிறந்தநாள் விழாவாம் !

மக்கள் கவிஞனின் மணிவிழா சேர்வீர் !
   மாரு டைத்தெழும் வேட்கையும், துணிவும்,
மிக்க வாண்மையும், வீரமும், அழகும்,
   மின்னு மறிவுடன் மீறிடும் கவியும்,
சொக்க வாண்டிடும் சுந்தரத் தமிழும்,
   சோதி யானநல் மெய்த்திற மெல்லாம்
அக்னி வான்சுடர் போலொளி வீசி
   அவத ரித்ததைப் பாடும்வி ழாவாம் !

-விவேக்பாரதி
14.12.2016

Comments

Popular Posts