விரிந்த காவிரி

உடம்பிடை ஊறு கின்ற
    உதிரமே அனித்து! நாட்டோர்
தடம்பதி வயல்வ ரப்பின்
    தடத்தினிற் பரிசென் றாகி
முடவனின் கையில் தேனாய்
    முழுசெழும் பரப்பு தாங்கிக்
கடமையைச் செய்வ தற்காய்
    காவிரி விரிந்த தன்றே!

நிலமகள் அணிந்த பட்டு!
    நீர்நிலை அணிந்த மின்னும்
உலகமே அணிந்த செம்மை
    உணர்வுகள் அணிந்த பாசம்!
மலரிதழ் அணிந்த மட்டு!
    மானினம் அணிந்த புள்ளி!
கலைகளை அணிந்த நாட்டில்
    காவிரி விரிந்த தன்றே!

சேலொடு தங்கம் வெள்ளி
    சேர்பல ஓலைக் கல்வி
வேலரும் வாளும் ஏந்தி
    வேதனை தீர்ம ருந்துச்
சாலையென் றாகிச் சாதி
    சமநிலை காட்டி! வெய்யோன்
காலையின் ஒளியைப் போன்று
    காவிரி விரிந்த தன்றே!

கரையிலே அலையின் முத்தம்
    கடலிலே நதியின் முத்தம்!
நுரையெலாம் மருந்தின் முத்தம்!
    நூதனச் சுழலின் முத்தம்!
வரையிலே நெல்லின் முத்தம்
    வனப்பெழும் முத்தம்! என்றே
கரங்களை அகல நீட்டிக்
   காவிரி விரிந்த தன்றே!

காவிரி பாயும் சத்தம்!
    கடவுளர் வேதச் சத்தம்!
பூவிருந் துண்ணும் வண்டின்
   புதுவிதச் சத்தம்! நாட்டுக்
காவலர் ஆர்க்கும் சத்தம்!
    கவிதைகள் கேட்கும் சத்தம்!
மேவிடப் பரந்து வாழும்
   மேன்மிகு நதியே வாழி!!

-விவேக்பாரதி

10.09.2017

Comments

Popular Posts