பிரிந்த குமாரி

வாசலில் வந்து வசந்தங்கள் காட்டிய
   வண்ணக் குமரி மறைந்துவிட்டாள் - மனத்
தாசையைத் தூண்டி அகழ்ந்திட்ட நாயகி
   ஆவியைப் போலப் பறந்துவிட்டாள்!
பேசையிலே பல மாயங்கள் பண்ணிய
   பேதை மனத்தைக் கிழித்துவிட்டாள் - அழும்
ஓசை எழுமென் றறிந்திருந்தும் எனை
   ஓரத்தில் விட்டவள் சென்றுவிட்டாள்!

காதற் கனவுகள் காமப் பொழுதுகள்
   கண்ணிற் கனவெனக் காட்டியவள் -பல
போதக் கதைகளும் போதை மொழிகளும்
   புத்திக்குள்ளே வந்து மூட்டியவள்!
சேதமிலாததோர் ஆனந்த ஜோதியில்
   சேர்ந்து குதித்திடும் வேளையிலே - ஒரு
நீதமும் இன்றி மனத்தை அறுத்தவள்
   நீங்கிவிட்டாள் உயிர் வாங்கிவிட்டாள்!

நெஞ்செனும் காட்டிடை ஆசைப் பொறிதனை
   நேரும் குளிருக் கிதமெனவே - வைத்த
கொஞ்சப் பொழுதுக்குள் காட்டினில் தீயெனக்
   கோலம் புனைந்ததைத் தீய்த்துவிட்டாள்!
மிஞ்சும் நினைவெனும் சாம்பற் குவியலில்
   மீண்டெழுந் திங்கிதைப் பாடுகிறேன்!  - அதில்
அஞ்சி நடுக்கி ஒதுங்கிய பாலகன் 
   ஆறுதல் தோள்களைத் தேடுகிறேன்!

என்ன நினைத்தவள் வந்துநின்றாள்?  என்னில்
   எதனைக் கண்டவள் நீங்கிவிட்டாள்? - விடை
ஒன்றும் விளங்குதற் கில்லையம்மா! நெஞ்சில்
   ஒட்டிய பாவையாற் தொல்லையம்மா!
என்றும் இருக்கும் உளம்படைத்தாள்! பின்னர்
   ஏனோ என்னைப் பிரிந்துவிட்டாள்! - மனம்
கொன்றுவிட்டாள் மதி தின்றுவிட்டாள்! உள்ளிற்
   கோடு போட்டு ரணமாக்கிவிட்டாள்!

காளி விலாசத்தைத் தேடுகிறேன்! அதைக்
   காணவில்லை மிக வாடுகிறேன்! - என்
தோளிற் சுமைவந்து கூடிடவே, நிழல்
   தோன்றும் இடத்தை விரும்புகிறேன்!
நீளும் கனவுகள் தீருகவே மனம்
   நிம்மதி தன்னை வருடுகவே! - இந்தத்
தாளும் கணினியும் கற்பனையும் என்றன்
   தாயின் உருவத்தைக் காட்டுகவே!

மோக மழிவினை எய்திடுக! அருள்
  மொத்த மழையெனப் பெய்திடுக! - உயிர்த்
தாக மடங்கித் தனல்வளர்க! குளிர்
   தானுடன் நீங்கிச் சுகம்தருக!
வேக மெடுத்திங்கு வந்த குமாரியின்
   வெட்டும் நினைவும் ஒடிந்திடுக! - துயர்
சோகம் விலகுக வேதனை செல்லுக
   சொன்ன படிமனம் நின்றிடுக!

பாட்டினைத் தந்திடும் பார்வதி தேவியென்
   பாவ மனைத்தையும் தீர்த்திடுக! - உயிர்க்
கூட்டிடை ஆனந்தக் கோலம் வளருக!
   கொல்லும் விரகம் சிதைந்திடுக! 
மீட்டும் தெளிவென்னைச் சூழ நெருங்குக! 
   மிரட்டும் கற்பனை ஓடிடுக! - நெஞ்சக் 
காட்டில் மலரிதழ் விண்டம் மலரென்றன் 
   காளியின் தாளை அடையுகவே!!

-விவேக்பாரதி
13.12.2017 

Comments

Popular Posts