கவிதை ஆண்டாள் - 1
(திரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன்.)
அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது.
அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால் ஆண்டாளின் கவிதா ஆவேசம் கூட இயல்பானதாகவே எனக்குப் படுகின்றது. அவள் கொண்ட தமிழின் ஆழ்ந்த அறிவினைக் காணும் பொழுது அவள் வெறும் பக்தி மட்டுமே தனது எண்ணமாகக் கொண்ட பெண்ணாக எனக்குப் புலப்படுவதில்லை.
தனது 15 ஆவது அகவையில், அவள் அரங்கத்துப் பெருமாளைச் சரண்புகுந்தாள் என்றால் அதற்கு முன்னமே தனது மிகச்சிறு இளம் வயதிலேயே பாசுரங்கள் இயற்றிப் பாரெலாம் பார்க்கச் செய்த தமிழின் ஆளுமை நன்கு புலப்படுகிறது. செப்பலோசை கொண்டு பேச வந்த ஆண்டாள், "இயல் தரவினைக் கொச்சகக் கலிப்பா" என்கின்ற பாவடிவத்தில் தந்திருக்கின்ற முப்பது திருப்பாவைப் பாடல்களும் பக்தியோடு இயைந்த காதலையும், பக்தியோடு இயைந்த சமுதாய நெறிபாடுகளையும் உரைக்கின்றது.
அக்காலத்தே அவள் பயன்படுத்திய தமிழோ "வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ பிறவும் எல்லாம் சொல்லாக்கும்மே" என்னும் தொல்காப்பியர் கூற்றுப்படியே இருந்து வந்துளது. சொல்லப் போனால் அந்த பிரபந்தக் காலத்தில் இன்று போல வேற்றுமை பாவிக்கும் பிரிவினைப் பழக்கமே இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
கனவாய்க் கண்ட காட்சிகள் யாவையும் கன்னித் தமிழில் கனாக்கண்டேன் என்று அவள் அடுக்கி வைக்கும் பாங்கு அன்றைய தமிழ்ச் சமூகத்தில் நடந்த திருமணத்தின் பதிவுக் கோவையாகத் திகழ்கின்றது. காதலோடு கலந்த தன் பக்தியை நாச்சியார் திருமொழியில் அந்தப் பேச்சியார் (ஆண்டாள்) கூறுகின்ற பாங்கில் அவள் எண்ணம் முழுதும் கண்ணன் அமர்வைக் காட்டுகின்றது.
"என் மேனி பெருமாளுக்கு அல்லாது வேறு ஒரு மானிடர்க்கு என்று நான் கேள்விப் பட்டாலே என்னால் வாழ முடியாது" என்றொரு கவித்துவமான சொல்லாட்சியை ஆண்டாள் உரைக்கின்ற நேர்த்தி அழகோ அழகு.
ராமானுஜரைத் திருப்பாவை ஜீயர் என்று உலகார் அழைக்க வைத்த பெருமை அந்தத் திருப்பாவையை யாத்த ஆண்டாளையே சேரும். அவள் கண்ட கனவுகளில் ஒன்றான ஆயிரம் தடா நெய்யூற்றிய அக்கார வடிசல் கைங்கரியத்தை ராமானுஜர் மூலம் நிகழ்த்திக் கொண்ட, அவருக்குத் தங்கையாகவும் மாறி நிற்கிறாள் அந்தக் கோதை.
நவீன இணையதள உலகத்தில் காதலர்கள் தங்களுக்குள் கூறிக்கொள்ளும் "I Love You" என்கிற 143 சமிஞ்கையை ஆண்டாள் தனது 143 பாடல்களால் சொல்லிவிட்டாள் என்று கிரேஸி மோகன் இப்படிச் சொல்லி சிரிப்பார்!
பட்டர்பிரான் பெண்ணைப் BUTTERபிரான் கண்ணன்
TWITTERஇலே காதல் தூதுவிட்டான்! - LETTERஆய்
நூத்திநா பத்துமுன்று அவளும் நூத்தாள்
ஆத்தியது ILOVEYOU ஆச்சு! - கிரேஸிமோகன்.
அவளுக்கொரு வெண்பா:
அரங்கனையே எண்ணி, அகத்திருத்தி, பாட்டுச்
சுரங்களையே தந்த சுடரே! - வரங்களைப்போய்
யாமெங்கு தேட யெமக்கெதிரே ஆண்டாளாய்ப்
பூமகளே நின்றிருக்கும் போது!
-விவேக்பாரதி
07.12.2016
Semma👏👏👏
ReplyDelete