காளிப்பாட்டு களிப்பாட்டு

காளி என்ற சொல்லை - நம்
   கருத்தி னுக்குள் வைக்கத்
தோளில் வலிமை சேரும் - எதிலும்
   தோன்றும் வெற்றி நேரும்!
நீளும் துன்ப மெல்லாம் - மாய
   நினைவ கன்று போகும்
தாளும் வைர மாகும் - மார்பில்
   தாயின் வீரம் ஊறும்!!

காளி எனப தென்ன? - உள்ளக்
   களிகொ டுக்கும் வார்த்தை
காளி என்ப தென்ன - ஆழக்
   கவிகொ டுக்கும் ஆற்றல்
காளி என்ப தென்ன - ஊரில்
   கவலை தீர்க்கும் போதை
காளி என்று சொல்ல - நெஞ்சக்
   கயமை மாளும் திண்ணம்!

காளி என்று சொல்வோம் - நாளும்
   கடமை செய்து வெல்வோம்!
காளி உலக மாவாள் - அவளே
   கருவும் உயிரும் ஆவாள்
காளி ஒற்றை ஜோதி - வையம்
   கண்டெ டுத்த ஆதி!
காளி நாமம் வாழ்க - நம்மைக்
   காளி நிழலும் சூழ்க!!

-விவேக்பாரதி
30.11.2017

Comments

Popular Posts