குமரியம்மா

மூக்குத்தி மினுமினுக்க நாலா பக்கம்
    முக்திநிலை ஜொலிஜொலிக்கக் கடலோ ரத்தில்
வாக்குத்தீ விளைக்கின்ற கன்னி யாகி
    வளமுடைய குமரியாகி வாழும் தேவி!
நாக்குத்தீங் குரைக்காத நலமும்! யார்க்கும்
    நல்லதையே எண்ணுமொரு திறனும்! உண்மை
காக்குந்தீ ரமுந்தந்து சுடர வைப்பாய்!
    காலில்விழு பக்தனெனை வாழ வைப்பாய்!

காணாத துக்கமிலை என்று சொல்லேன்!
    காப்பாயென் றருட்கமல அடியில் வீழ்ந்தேன்!
பூணாத மாற்றமிலை! அடியன் நெஞ்சம்
    புகழாத போதையிலை! என்ற போதும்
வானாக வளியாக நிலமு மாக
    வந்தவரைக் காக்கின்ற சக்தி, நின்மேல்
நாணாத பக்திநிலை கொண்டு வந்தேன்!
    நாயடியேன் நின்னுருவே அனைத்தும் என்பேன்!

போதத்தைத் தருகின்ற குருவும் சக்தி!
    போகத்தைத் தருகின்ற திருவும் சக்தி!
நீதத்தைத் தருகின்ற கலைகள் சக்தி!
    நிகழ்கின்ற செய்கைகள் யாவும் சக்தி!
காதுக்குள் கேட்கின்ற ஓசை சக்தி!
    கண்பார்க்கும் காட்சிக்குள் எல்லாம் சக்தி!
சேதத்தை ஏற்படுத்தும் செறுக்கும் சக்தி!
    சேர்த்ததனைப் பேர்க்கின்ற துணையும் சக்தி!

உயிர்சக்தி உடல்சக்தி உணர்வும் சக்தி!
    உண்மைபொய் எல்லாமும் சக்தி! வான
வெயில்சக்தி குளிர்சக்தி அன்னை சக்தி
    வேண்டுவரம் தருகின்ற தந்தை சக்தி!
வையத்தில் சக்தியன்றி பிறிதொன் றில்லை!
    வாழ்வளிக்கும் வைரநெஞ்சம் அதுவும் சக்தி!
முயற்சிக்கு வித்தாகும் முனைப்பும் சக்தி!
    முழுவுலகும் சக்தியெனப் பேசிப் பேசி

உள்ளார்ந்த ஆத்மநிலை அடையும் எண்ணம்
    உயர்த்துகிறேன்! இதுசரியா அறியேன் அம்மா!
கள்ளார்ந்த கவிதைகளைப் பாடிப் பாடிக்
    காளிமகா சக்தியையென் அருகில் வைப்பேன்!
முள்ளார்ந்த தீவனத்தில் முயலைப் போல
    முழுமையறி யாக்கிணற்றில் கன்றே போலப்
பள்ளார்ந்த கவிகொண்டு கதற லல்லாற்
    பாலகன்வே றேதறிவேன்? பார்ப்பாய் நீயே!!

-விவேக்பாரதி 
19.12.2017

Comments

Popular Posts