கனவுக் கண்ணோட்டம்

இந்தக் கண்ணோட்டத்தின் மிச்சம்
கனவில் தொடருமோ?

காற்று புகாத இடைவெளியில்
கவிதை புகாத மனவெளியில்
நேற்றை நாளையை நாம்மறந்து
நீச்சல் இட்ட அப் பெருவெளியில்!
மாற்றம் செய்திட முடியாமல்
மனமோ விலகிடத் தெரியாமல்
ஆற்றுப் படுகையில் மரவேராய்
அணைத்துப் பிணைந்திட நிற்கையிலே

இந்தக் கண்ணோட்டத்தின் மிச்சம்
கனவில் தொடருமோ?

ஈரக் கண்கள்! இமையிரண்டும்
இதயம் நனைக்கும் மேகங்களாய்!
தூரம் தூரம் சென்றிடவே
தொலைவில் பார்க்கும் ஏக்கங்களாய்!
காரும் மழையும் இடிமின்னல்
காட்டும் இரவும் நமக்காகப்
போரை நிகழ்த்தி ஒலியெழுப்பப்
போகச் சத்தம் நாமிசைக்க!

இந்தக் கண்ணோட்டத்தின் மிச்சம்
கனவில் தொடருமோ ??

உதட்டு வரிகளை உறிஞ்சிடவும்,
ஊமைக் கழுத்தைக் கவ்விடவும்,
அதட்டும் கண்கள் அடங்கிடவும்,
அன்பளிப்பாய் உடல் அமைந்திடவும்,
கதவாய் இருந்த நாணம் எல்லாம்
கவலையில் மூலை தனிலமர்ந்து
மிதமாய்த் தலையில் அடித்தபடி
மீட்டும் நம் நாடகம் காண்பதுவும்!!

ஆம்
இந்தக் கண்ணோட்டத்தின் மிச்சம்!!
ஊஹும்...
மிச்சமல்ல
மொத்தமும்
கனவில் தான் தொடருகிறது!!


-விவேக்பாரதி 
06.09.2017

Comments

Popular Posts