கவிமலர்

இழையோடிப் போகும் மின்னலுக் குள்ளே
    ஈரச் சலனங்கள் - ஒளிர்
    இதயக் கிரணங்கள்,
மழையோடு கின்ற முகில்களுக் குள்ளே
    மனதின் பயணங்கள் - அவை
    மாயப் புவனங்கள்!
அழைக்காமல் வந்து சேர்கின்ற ஆசை
    ஆட்டம் பாட்டங்கள் - சில
    அழிவுக் கீட்டங்கள்!
கழையோடு ராகம் கவிபாடக் கேட்கும்
    கன்னித் தோற்றங்கள்! - எழில்
    கவிதை ஏற்றங்கள்!

சரியாத கூந்தல் சரியான நெற்றி
    சலசலக்கும் இளமை - அவள்
    சடையசைக்கும் வளமை
புரியாத நாணம் புதிரான கண்கள்
    புத்தி மயக்கங்கள் - வெறும்
    பூழ்தி இயக்கங்கள்!
அரிதார மற்ற அவதாரப் பெண்மை
    அகத்தில் மின்னல்கள் - தர
    அகலும் இன்னல்கள்
மரியாத இன்ப மருந்தாகும் கவிதை
    மண்ணில் சொர்க்கங்கள்! - நம்
    மதியின் சிற்பங்கள்!

சிலவந்து போக சிலநின்று சாக
    சில்லரை வார்த்தைகள் - தரும்
    சிலிர்ப்பு போதைகள்
பலவந்த மாக மார்மீது பாயும்
    பகலின் கிரணங்கள் - அதில்
    பாடல் உதயங்கள்!
நிலவந்த விண்ணின் நிழலென்று சொல்லி
    நிலவும் தர்க்கங்கள் - அதில்
    நிகழ்த்தும் யுத்தங்கள்!
மலரென்று பூத்து மலையென்று மாறும்
    மந்திர ஜாலங்கள் - கவி
    மலர்வதன் கோலங்கள்!!

-விவேக்பாரதி
28.11.2017

Comments

Popular Posts