அழகு மனையாள்

அழகென்ப துண்மை அழகென்ப துச்சம்
அழகென்ப தெல்லாம் அவள்!"


அழகென்னும் பெண்ணாளை மணந்து கொண்ட
    அப்புறம்தான் என்வாழ்வில் வசந்த காலம்!
எழவைத்தாள் எப்போதும் ஏகாந் தத்தில்
    என்னோடு குலவிபல கவிதை ஈன்றாள்!
விழவைத்தாள் விழுகையிலே மெத்தை ஆகி
    வீழ்கின்ற எனைத்தாங்கி விந்தை செய்தாள்!
அழவைத்தாள் சிரிப்பிற்கும் ஆதி ஆனாள்
    அன்னாளைக் காதலினால் வென்று விட்டேன்!

பார்க்கின்ற இடமெல்லாம் அவளின் ஜோதி
    படர்கின்ற தென்றுரைப்பேன் என்னா ணைக்கே
வேர்க்கின்ற அழகென்றன் மனையாள் ஆவாள்
    வென்றவன்நான் அவளிடமும் அடிமை பூண்பேன்!
சேர்க்கின்ற சேர்ப்பெல்லாம் அவளின் சேர்ப்பு
    ஜகந்தன்னில் அவளின்றி வாழ்க்கை இல்லை!
ஆர்க்கின்ற மலையருவி அசையும் தென்னை
    ஆழத்தின் குகையெல்லாம் அவளால் கண்டேன்!

மாடத்தில் ஒளியாவாள்! மாலை வேளை
   மலராவாள் நிழலாவாள்! மயங்கி வீழும்
கூடத்தில் மதுக்கின்னம் கையில் ஏந்திக்
    கொண்டூட்டும் கவியாவாள்! ஆற்றி லோடும்
ஓடத்தின் அசைவினிலும் அலையின் கீத
    ஒய்யாரப் பாட்டினிலும் கண்ணிற் றோன்றி
பாடத்தான் வைத்திடுவாள்! அழகென் தேவி
    பார்வைக்குக் குமரியவள் பழமைக் காரி !

தாயென்றால் அரவணைப்பாள் தந்தை என்றால்
    தாரணியில் பலபாடம் காட்டி நிற்பாள்!
சேயென்றால் குழைந்திடுவாள் ஓடி யாடிச்
    சேட்டைகள் செய்திடுவாள்! காதல் ஏந்தும்
மாயவளாய் மனக்காட்டைப் பற்றி ஆட்டி
    மயங்கத்தான் வைத்திடுவாள் அழகை யிங்கே
நீயெவ்வா றழைப்பாயோ அத்தோற் றத்தில்
    நிச்சயமாய்த் தோன்றியுனை இயக்கு வாளே!

-விவேக்பாரதி
t
25.08.2017

Comments

Popular Posts