இனியோர் புதியவிதி

கல்வி எனப்பெயர் சொல்வார் - அதைக்
    காசுக்கு விற்றிடும் மக்கள்
நல்ல விலைசொல்லிக் கேட்பார் - மக்கள்
    நாடி அதைக்கொள வோடி
சொல்லும் புகழுடன் பட்டம் - பொய்
    சுற்றும் விளம்பரம் பார்த்தே
எல்லா பணமும் இழப்பார் - எனில்
    ஏறிய ஞானமொன் றில்லை !

மேலை வழக்கங்க ளென்பார் - வெறும்
    மேலுக்கு உயர்ரக மாகும்
வேலைப் பாடுமிகும் இடங்கள் - கட்டி
    வெற்றுப் புகழ்ச்சிகள் சொல்வார் !
ஓலைச் சுவடிதரும் கல்வி - அதன்
    ஒண்மை மறந்துவிட்ட மக்கள்
வாலை ஆட்டிப்பின்னர் செல்வார் - உயர்
    வாழ்க்கை நிலையடைந்த மென்பார் !

சேரும் கூடங்களில் கல்வி - அறிவு
    சரிவரச் சேருதல் காணார் !
"யாரும் புகழ்ந்திட வேணும் - மகன்
    யார்க்கு மரியவிடந் தன்னில்
பாருள் பயில்வனெ"னக் கொண்டு - புகழ்
    பாடிக் கிடப்பரப் பெற்றோர்
நெரும் கல்விநிலை மாற்றம் - தனை
    நேரில் எண்ணுவதும் இல்லை !

பள்ளி யெனில்கலையின் கூடம் - அது
    பகரும் வாழ்க்கைநிலைப் பாடம்
துள்ளித் திரிந்துவிளை யாடும் - பிள்ளை
    தூயோர் மனவெளிகள் எல்லாம்
கொள்ளை ஞானமுரு வாக்கல் - பல
    கொள்கை சொல்லியறி வூற்றல்
விள்ளும் நிலையிருக்க வேண்டும் - இவை
    வீற்றிருக் காவிடங்கள் உண்டு !

பாடம் அறிவிலுற வேண்டும் - மனப்
    பாடம் செய்யும்வகை இல்லை !
தேடும் பொருளுயர்வுக் கல்வி - அதைத்
    தெளியும் மனநிலையும் வேண்டும் !
கூடும் உயர்க்கல்விக் கெல்லாம் - பலக்
    கூட்டத் தேர்வுமுறை சொல்லி
வாடும் படிக்கலைய வைக்கும் - கல்வி
    வாழத் தகுதிகளும் இல்லை !

செய்யத் தொழில்வழிகள் ஆக்கல் - கல்வி
    சேர்க்கும் மாணவருக் கெல்லாம்
உய்யும் நிலையதனைச் செய்தல் - இவை
    உயரும் அரசின்கடன் ஆகும் !
பொய்யும் புரளிகளும் போக - கல்விப்
    போதம் நல்லநிலை காண
ஐயம் அற்றுவினை செய்தால் - அறிவு
    அற்றம் காப்பதுவும் திண்ணம் !

இனியோர் புதியவிதி செய்வோம் ! - பிழை
    இயற்றும் பழையவிதி கொய்வோம் !
மனிதர் அறிவுபெற வேண்டும் - அதை
    மண்ணில் தடுக்குமுறை கண்டால்,
அனலில் அதையெடுத்துப் போட்டு - எங்கும்
    அறமே செழிக்கும்வகை செய்வோம் !
இனுமோர் உயிரிழப்பை வேண்டோம் - நம்
    இயக்கம் அழிவுக்கில்லை தோழா !

-விவேக்பாரதி

01.09.2017

Comments

Popular Posts