எது கருத்துச் சுதந்திரம்?

கருதுகின்ற கருத்தெல்லாம் நற்கருத்தா யாவதலை!
    கருத்தில் உண்மை
விரவிவரும் கருத்துகளே வீரியத்தோ டிந்நாட்டை
     விரைவாய்க் காக்கும்!
பெருகிவருங் கருத்துகளில் பெற்றியுடை யக்கருத்தைப்
    பேணி நாளும்
உரமெனவே விதைக்குங்கால் புரட்சியெனும் மரக்கூட்டம்
    உச்சி காணும்!

எப்பொருளை யாருரைப்பார் என்றாயும் பேதமிலை!
    எனினும் இங்கே
செப்புகின்ற செய்தியிலே சேர்ந்திருக்கும் உண்மையென்ன
    சலித்துப் பார்த்திங்
கொப்புவதை மட்டுமெடுத் தோதிடுதல் உதவிடுதல்
    உயர்த்தல் வேண்டும்!
தப்புசரி ஆராய்ந்து போற்றுதல்நம் பக்குவத்தின்
    தன்மை காட்டும்!

ஊருவக்கும் என்றெண்ணிப் பாராட்டுக் கிங்கொருவர்
    உண்மை தன்னில்
காருருவப் பொய்கலந்து சாற்றுவதும் நியாமிலை!
    கருத்தைப் பல்லோர்
நேரெதிர்க்கக் கூடுமென எண்ணியொரு சத்தியத்தை
    நேரே சொல்ல
ஓரச்சங் கொள்வதிலும் பயனில்லை! நற்கருத்தோ
    ஓங்கும் திண்ணம்!

நாட்டுக்கு நல்லதுவாய்! மக்கள்நலம் கொள்வதுவாய்
    நற்க ருத்தைப்
பாட்டுக்குள் பேச்சுக்குள் சித்திரத்துள் சிலைவடிவுட்
    பண்ணல் வேண்டும்!
வேட்டுக்கு நிகரெண்ணம் வருமாயின் கொடுமைமலை
    வெட்டுப் பட்டு
மேட்டுக்கும் சமனாகும் பேறுதரும்! கருத்துக்கள்
    மேன்மை சேர்க்கும்!

ஒருகுலத்தை ஓரினத்தை ஒருகூட்டத் தினைவெறுக்கும்
    ஒழுங்கில் எண்ணம்
கருத்துக்குள் சேர்வதெனின் அக்கருத்தை கேட்பவரே
    கழித்தல் வேண்டும்!
குருத்துக்குள் பாம்புந்தான் உண்டதனில் விஷமில்லாக்
    குட்டி யுண்டு,
பருந்தென்றால் பிணந்திண்ணும்! இயல்மாறிப் பழந்தின்றால்
    பகைமை தானே!!

-விவேக்பாரதி
06.11.2017

Comments

Popular Posts