கூற்றுவச் சீற்றம்

ஓராயிரம் கோடி உருவான ஈட்டிகள்
   ஓங்கிவந்து உள்ளில் பாயும் !
நீராய் அரும்பி கண் இமை மூட மாட்டாமல்
   நிழல்தேடி சொருகி வீழும்!
பேராதரவு என்று பிழையாய் நினைத்தவர்
   பெரும்பள்ளம் தோண்டும் போது,
கூரான கத்தியும் நெஞ்சைக் கிழிக்கின்ற
   கூற்றுவச் சீற்றம் நேரும்!

உடலமே பொய்!இந்த உயிருமே பொய்!இதை
   உறுதியாய் நம்பிவிட்டேன்!
இடையிலே வந்ததாம் உறவென்ன? பிரிவென்ன ?
   இம்மியாய்க் கருதிவிட்டேன்!
கடவுளாய்ச் சிலரையும் உலகமாய்ச் சிலரையும்
   கருதிடும் பாவ நெஞ்சம்,
அடிபட்டு மிதிபட்டுத் தேறிடும் பொழுதிலே
   அனுபவம் மட்டும் மிஞ்சும்!!

-விவேக்பாரதி
19.08.2017

Comments

Popular Posts