கம் கணபதயே நமஹ

இசைக்கவி ரமணன் ஐயாவின் "கம் கணபதயே நமஹ" கவிதை தந்த கிளர்ச்சி..

சிறுமையில் நாளும் சிக்குறும் நெஞ்சம் 
      சிலிர்ப்பைக் கண்டிட வேண்டும்!
  சின்னவன் என்னை மென்மலர்க் கண்கள் 
      சிமிட்டி நோக்கிட வேண்டும்!
வறுமையில் வாடும் அடியவன் நெஞ்சம் 
      வளம்பெற நின்றாள் வேண்டும்! 
  வாட்டத் தினிலும் ஓட்டம் குறையா 
      வலிமை உளத்தில் வேண்டும்! 

கனவில் வந்திவை தருக! ஓம் 
கம் கணபதயே நமஹ!! 

உள்ளக் கடலின் ஓரச் சலனம் 
      உடனே அடங்கும் யோகம் ! 
  ஊமை மொழியில் பொருளை அறிந்தே 
      உச்சியைக் காணும் யோகம் ! 
தெள்ளத் தெளிந்த அறிவுப் புனலில் 
      தெளிநீ ராடும் யோகம் ! 
  தேடும் பொருளை நாடும் மனதின் 
      தேவை யறுக்கும் யோகம் ! 

காட்டிக் கதியைத் தருக! ஓம் 
கம் கணபதயே நமஹ! 

காற்றுக் குள்ளும் கதிருக் குள்ளும் 
       கடுகிச் செல்லும் உள்ளம் ! 
  கவிதை வழியே ககனத் திடலில் 
      கலந்து கிடக்கும் உள்ளம் ! 
ஆற்றின் விசையில் அருளின் தெருளை 
      ஆழ்ந்து பருகும் உள்ளம் ! 
  ஆடிக் கொண்டே பாடிக் கொண்டே  
      அருகில் அமரும் உள்ளம் ! 

கைகளுக் குள்ளே தருக! ஓம் 
கம் கணபதயே நமஹ! 

தீர்ந்து போகா வீரியம் காலத் 
      திருப்பம் தோறும் வீரம் ! 
  தினறிப் போகாப் பேச்சு! என்றும் 
      திரளும் ஞான வெள்ளம் ! 
சேர்ந்து வாழச் செழித்த சுற்றம் 
      செல்லும் வாக்கில் நேர்மை ! 
  சேர்த்தே கேட்பேன் துதிக்கை தூக்கிச் 
      சேர்ப்பேன் என்றே சொல்க! 

காலத் திறையே வருக! ஓம் 
கம் கணபதயே நமஹ!!

-விவேக்பாரதி 
02.12.2017

Comments

Popular Posts