இளைஞர் வானம்


கவிஞர் கே.ரவி ஐயா சொன்ன முதல்வரிக்குப் பாடியது...

என்று விடியும் எங்கள் இளைஞரின் வானம்?
    என்று கலையும் இந்தத் தூக்க நிதானம்?
என்றெம திருவிழியும் விடியலைக் காணும்?
    என்றந்த அழகினை யாம்பெறக் கூடும்?
கொன்றிடும் கும்மிருள் இரவினில் எல்லாம்
    கொட்டடித் தாடிக் கூத்தடித் திங்கே
நன்றெனக் கூறும் காலையில் எல்லாம்
    நற்றுயில் கொள்வ தெங்ஙணம் போகும்?

தூக்கமும் சோம்பலும் எம்மிளை யார்க்கோ?
    சுடர்விடும் விடியலும் வேறினி யார்க்கோ?
ஆக்கமொன் றருளுதல் நம்கடன் என்றே
    அறிந்தபின் துயிலினில் ஆழ்ந்திட லாமோ?
போக்குவம் காலையில் துயிலினை நாமும்!
     பொழுதினை இன்பமாய் மாற்றுவம் நாளும்!
சீக்குடை யார்கொலொ? இளைஞரின் கூட்டம்?
    சிங்கமோ காலையில் துயில்கொளப் பார்க்கும்?

நேரத்தில் உறங்குதல் அறிவியல் ஆகும்
    நெஞ்சிலிதைக் கொண்டு வாழுவம் நாமும்!
சாரத்தையே யிந்த இயற்கை வழங்கும்!
    சக்தியும் உடல்கொளும் சீரில் விளங்கும்!
காரணம் காரியம் சொல்வதை விட்டுக்
    காலச் சுழற்சியில் ஓடுவம் கற்று!
வீரமெலாம் உடல் நலத்தினில் சேரும்
    வியன்சித் திரமிடச் சுவருறல் வேண்டும்!!

-விவேக்பாரதி
17.10.2017

Comments

Popular Posts