கண்கண்ட புண்ணியம்

நானும் அண்ணன் கவிஞர் சுந்தரராஜனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கடையத்தில் மகாகவி பாரதியால் பாடப்பெற்ற கல்யாணி அம்மன் கோவிலைக் கண்டு வந்தோம்...அந்தக் காட்சி நினைவிலோட எழுந்த பாடல்.

கண்கண்ட புண்ணியம் கணக்கேறுமோ? - மனம்
   கைக்கொண்ட சந்தோஷம் அளக்கூடுமோ?
பண்கண்ட பரவசம் சொலற்கெளியதோ? - நான்
   பார்த்தவை யாவையும் பதிவாகுமோ?

காலார நடைகொண்ட இன்பத்திலும் - அந்தக்
   காரிருளில் கேட்டபல் சந்தத்திலும்
பாலாறு போல்ஜம்ப ஆற்றோசையும் - அதன்
   பாலத்தில் யாம்சென்ற காலோசையும்
தாலாட்டித் தலைதொட்ட காற்றின்கரம் - உயிர்
   தாகத்தைத் தீர்க்கின்ற கோவில்சுடர்
வாலாட்டி முன்நின்ற நாய்க்குட்டியும் - எழில்
   வனப்போடு கண்வென்ற தாய்சக்தியும்! (என்று)

சில்வண்டின் பொன்வீணை ராகங்களும் - உள்
   சிவன்கேட்ட பலமந்த்ர வேதங்களும்
கல்யாணி அம்மனின் கண்ணோவியம் - அங்குக்
   கவிராசன் கவிசெய்த நினைவோவியம் 
சொல்லாடி டாதென்றன் நெஞ்சோரமாய்க் - கோடி
   ஸ்லோகங்கள் கொடுத்திட்ட கோவில்வாசம்
நில்லாமல் அணையாமல் என்னுளம்போல் - உள்
   நிழலேந்தி எரிந்திட்ட விளக்குஜோதி! (என்று)

வேண்டாமல் ஈடேறும் என்றவெண்ணம் - எதும்
   வேண்டாமல் நான்நின்ற ஞாபகங்கள்
தூண்டாமல் கிடைக்காது துய்யஞானம் - எனத்
   தோன்றிட்ட உண்மையின் சூத்திரங்கள்!
பாண்டத்தில் நிறைந்திட்ட சக்திவெள்ளம்! - என்
   பாரதியார் செய்திட்ட பாடலுள்ளம்
காண்டீவம் போல்பெற்ற நல்லசுற்றம் - சுடர்க்
   கவியூற்று சுவையூற்று நட்பினேற்றம்... (என்று)

-விவேக்பாரதி
20.12.2017

Comments

Popular Posts