ஞானமாலை


காப்பு : 

தனிமையில் கண்ட ஞானம் 
   தமிழ்வழி வந்த ஞானம் 
இனிமையும் கசப்பும் ஒன்றாய் 
   இயக்கிய ஞானம் ! இந்த 
மனிதரை அமர ராக்கும் 
   மதிப்புடை படியாம் ஞானம் 
தனையிவண் பாடக் கேட்டுத் 
   தாவதை எனக்கும் வாழ்வே !! 

மாலை :

பிறப்பில் வருவதும் பின்னர் தெளிந்த 
சிறப்பில் வருவதும் சீராய்ப் - பறக்கும் 
இறப்பில் வருவதும் இவ்வுலகின் ஞானம் !
மறப்பின் திரும்பா மருந்து !! 

மருந்தென வாகும் மடமைகள் போக்கும் மதித்துவிட்டால் !
விருந்தென வாகும் வியப்புகள் காட்டும் விரும்பிவிட்டால் !
அருந்திடும் நெஞ்சம் அமைதியில் தங்கும் அமுதமென்றே 
இருந்தொளி சிந்தும் இனியது ஞானம் இகமிதிலே !! 

இகத்தில் நிகழும் இயக்கங்கள் எல்லாம் 
அகத்தின் நிகழ்வென் றரைந்தே - தொகுத்து 
வகுக்கும் இறையவன் வாசத்தாள் சேர 
உகுக்கும்மெய் ஞானம் உயர்வு !! 

உயர்வினில் தாழ்வினில் உன்னத நெஞ்சம் உழல்வதில்லை ! 
அயர்வினில் மூப்பினில் அம்மனம் தங்கி அமிழ்வதில்லை ! 
முயற்சி மறக்கும் முயல்மனம் வென்றிட முந்துதல்போல் 
உயிரறும் வேளை உருப்படும் ஞானம் உணர்விலையே !! 

உணர்ந்தால் புரியும் உலகின் நியதி ! 
புணர்ந்தால் புரியும் புதிர்கள் ! - இணங்கி 
மணக்கின்ற நார்போல் மனம்கொண்டு வாழ்தல் 
அணைக்கின்ற ஞானம் அது !! 

துளித்துளி யாகத் துவங்கிடும் கண்ணீர் துளிர்த்துவந்தே 
களிப்புகள் இன்பம் கனன்றெழும் கோபம் கரைத்துவிட்டு
அளிப்பது ஞானம் அமைதியின் வேதம் அதையுணரின் 
தளிர்ப்பது நெஞ்சம் தகுமிவை நேரும் தனிமையிலே !! 

தனிமையில் தோன்றும் தரமுடை ஞானம் 
இனிமையின் இன்பம் இயக்கும் - மனித 
மனத்தின் மயக்கம் மறந்திட ஞான 
வனத்தின் கதவே வரம் !! 

வரமென யார்க்கும் வருவதும் இல்லை வறுமையிலே 
தருமமென் றாரும் தருவதும் இல்லை தமையுணர்ந்து 
பொருதிடும் எண்ணப் பொறியை அடக்கும் பொறுமையிலே 
வருவது ஞானம் வயதுகள் இங்கே வரப்பிலையே !!

வரவும் செலவும் வளமும் பொருளும் 
வரமும் தவமும் வலியும் - தரமாய் 
இருப்பதிலை என்னும் இயலுணர்வோர்க் கென்றும் 
இருப்பது ஞானத் தியல் !! 

இயல்புடன் வந்திடும் இன்பம் வழங்கிடும் இஞ்ஞானம் ! 
முயன்றிட முந்திட மூட்டும் இதுபழ விஞ்ஞானம் !
அயர்வுறல் ஓடுதல் அஞ்சுதல் யாவையும் அஞ்ஞானம் !
சுயவறி வேயிதன் சூட்சமம் ! ஞானம் சுயவகழ்வே !! 

சுயத்தை அகழ்ந்து சுடரைத் திறந்து 
பயத்தை அகன்று பரந்தால் - வியக்க 
இயக்கம் நிகழும் இதயத்தே ! ஞானம் 
முயக்கம் விலக்கும் முரண் !! 

முரண்படும் வாழ்வில் முகிழ்வன எண்ணி முனகல்விட 
அரண்படும் ஞானம் அதனை அடைந்தால் அருள்பெருகும் !
சரண்படும் வீடும் ! சகலமும் சேரும் சரியெனவே 
உரம்படத் தோண்ட உடன்பட வாழ்வும் உருப்படுமே !! 

மேதினியில் ஞானந்தான் மேனிலைமை ! பொய்யாடும் 
பூதவுடல் காண்கின்ற புண்ணியமாம் - சூதறியா 
நீதிபுகல் நெஞ்சகம் ஞானமுரை மஞ்சமே 
சேதியறிந் துய்தால் செறிவு !! 

செறிவைப் பெறவும் செழுமை வரவும் செலுத்துகின்ற 
பொறியை அடக்கும் பொலிவைப் பெறவும் பொழுதனைத்தும் 
அறிவைத் திறந்தே அகம்திறப் போராய் அமைதிகொண்டால் 
நெறியும் தெளியும் ! நெளிவும் விலகும் ! நிதர்சனமே !! 

நிதர்சனம் யாதெனின் நிச்சயம் ஞானம் 
பதறிடும் வேளை பயன்தந் - துதவா ! 
விதியெனும் மாயை விளையாட் டதனில் 
சுதிபடும் ஞானம் சுகம் !! 

சுகமும் துயரமும் சூழ்ந்திடும் நேரம் சுவைகொடுக்கும் !
அகமும் வெளுத்திட அற்புதச் சிந்தை அவதரிக்கும் !
இகமும் மனத்தின் இயக்கப் புலனும் இனிமைதரும் !
நிகழும் இவையுயர் ஞானம் மனத்தில் நிலைத்திடவே !! 

நிலையான் தேதுமிலை நிச்சயம் ! என்னும் 
கலையாத உண்மைதனைக் கண்டு - மலைபோல் 
அலையாத நெஞ்சம் அமைகின்ற வேளை 
உலையாகும் ஞான உரு !! 

உருவினைக் கண்டோ உயர்நிலை கண்டோ உரிமைகண்டோ 
வரவுகள் கண்டோ வனப்புகள் கண்டோ வலிமைகண்டோ 
இருப்புகள் கண்டோ இயல்வன கண்டோ இருநிலத்தில் 
வருவதும் இல்லை வளமிகு ஞானம் வனக்கொழுந்தே !! 

கொழுந்தில் இலைகள் கொளும்நிறம் அந்தப் 
பழத்துக்கும் வாய்க்கின்ற பாங்காய்க் - குழந்தை 
எழும்போது பற்றும் எழுதா விதியே 
முழுதாகும் ஞான முகம் !! 

முகத்தில் முதிர்ச்சி முதுமை வளர்ச்சி முளைப்பதனால் 
அகழ்ந்தது ஞானம் அமைந்ததென் றாடல் அறிவில்வினை !
அகழ்ந்திடும் ஞானம் அமைவதெல் லாம்நம் அனுபவங்கள் 
புகன்றிடும் பாடம் ! புரிந்திடில் சொர்க்கம் புவிப்பிறப்பே!!

-விவேக்பாரதி
04.11.2017

Comments

Popular Posts