உணர்ச்சி

ஏதோ இனம்புரியாச் சலனம்
என்றன் மனத்தினிலே,
எதையோ தொலைத்துபோல் துயரம்
ஏந்தும் மதியிடையே,
ஏனோ பலப்பலவாய் மரணம்
அதன்பின் பல உயிர்ச்சி!
எனையே தின்பதுபோல் தருணம்,
இது தானா உணர்ச்சி?

கிடைக்கும் சுகத்தையெலாம் விரும்பிக்
கீழே வீழ்வதுவா?
கிரணப் பெருவெளியின் துகளாய்
மேலே எழுவதுவா?
உடைக்கும் கதவுகள்போல் மனது
உதிரும் கணப் பொழுது,
உரைக்கும் படியரையும் கசை! ஆ
இது தானா உணர்ச்சி?

ஓடித் திரிந்திடவே ஆசை
ஒதுங்கச் சொல்லும் மனம்!
ஓரக் கதவிடையே எலிபோல்
ஒடுங்கச் சொல்லும் குணம்!
பாடி களித்திடவே இதயம்
பார்வை விரித்திருக்கப்,
பார்க்கும் இடத்திலெலாம் பாதை!
இது தானா உணர்ச்சி?

கட்டை அறுத்திடவே எண்ணம்
கடமை கட்டியது!
கனவை விரித்திடவே ஆவல்
கதவை முட்டியது!
எட்டும் படிவரைக்கும் பாயும்
ஏழை நெஞ்சகத்தில்
எதற்கும் இடமிருக்கும் அங்கே
ஏற்கும் உணர்விருக்கும்!

உணர்வின் மடியினிலே உள்ளம்
ஊமைச் சங்கிலியில்!
உழலும் அகழியிலே அதுவும்
உருவிழந்த நிலையில்!
நினைவின் கோவிலிலே உணர்வு
நீளும் இறையாட்சி!
நிகழ்த்தும் நிஜவுணர்வே தெய்வம்!
நிஜமே மனசாட்சி!!

-விவேக்பாரதி
10.12.2017

Comments

Popular Posts