விருத்த மாலை

காப்பு:

ஆசானைப் போற்றி அரும்பாக்கள் சொல்கின்றேன்
மாசாகி டாமல் மகேசனும் காக்கவே !

நூல் :

(வெளிவிருத்தம்)

ஆசிரியர்கள் அறிவின் தேக்கம் எனச்சொல்வாய் - அவர்தாளில்
மாசிலா நல்மணியாய் மனதைப் பொழிந்திடுவாய் - அவர்தாளில்
கூசிடாத சுடரொளியாம் குணத்தைப் பெற்றிடுவாய் - அவர்தாளில்
பேசிடாது விழுந்து பணிவாய் உயர்வுருவாய் - அவர்தாளில் !

(ஆசிரிய விருத்தம்)

அவரது தாளில் நீயும்
   அன்பெனும் பூவைக் கொட்டித்
தவறுகள் களைய வேண்டித்
   தவங்களைப் புரிவாய் நாளும் !
புவனமும் புண்ய மெய்தப்
   புதுப்புதுக் கலைகள் கற்று
நவநனி நாக ரீகம்
   நல்குபவர் ஆசான் மாரே !

(கலி விருத்தம்)

மாரி லேநமை வைத்தெழில் கல்வியின்
வேரி னையரும் பாலென ஊட்டியே
பாரி லேநமை ஓங்கவைப் பாரெவர்
வாரி ஞானமும் வழங்கிடும் அத்தரே !

 (வஞ்சி விருத்தம்)

அத்தர் தம்மை அன்புடன்
புத்தி தன்னில் போற்றிடு
இத்த ரணியில் யாங்கணும்
சுத்த மானோர் ஆசானே !

(நால்வகைப் பாக்களுக்கும் உண்டான விருத்தம் எனும் பாவினத்தைக் கொண்டு பாடப்பெற்றதாகும்.) 

-விவேக்பாரதி
05.09.2015

Comments

Popular Posts