தண்ணீர்த் தினம்

தண்ணீரே மானுடரின் தாகத்தைத் தணிப்பாயே
மண்ணுக்குள் இருக்கின்ற உயிரைஎலாம் காப்பாயே
எண்ணத்தில் அதைவைத்து எழில்தமிழில் கவிநெய்தேன்
தண்ணீரே தரணியிலே தந்திடுவாய் செழிப்பினையே !

ஈசனைப் பிரம்படி படவைத்தாய் - நீயும்
   இருக்கவே அவன்தலை இடம்வைத்தாய்
மாசிலா மாமுனி அகத்தியனும் - கொண்ட
   மாபெரும் கமண்டலக் குடம்வைத்தாய்

ஏசியே பாஞ்சாலி நகையாட - துரி
   யோதனன் தன்னையும் விழவைத்தாய்
ஆசியக் கண்டத்தில் சுனாமியாய் - வந்து
   அண்டத்து மக்களை அழவைத்தாய் !

கண்ணிலே வந்துநீ குடிகொண்டாய் - மழைக்
   காற்றிலே முழக்கமாய் இடிகொண்டாய்
மண்ணிலே அமர்ந்திட மடிகொண்டாய் - வீசி
   அணைக்கவே அலையெனும் பிடிகொண்டாய்

வெண்ணிற மேகமும் கருமையுற - வந்து
   வீழ்ந்திடும் மழையென உருகொண்டாய்
தண்ணென மாறிடும் குணம்கொண்டாய் - முத்து
   தன்னையும் உன்னுளே கருகொண்டாய் !

நீரே அமுதே உன்னைக் கொண்டாடும்
நாளே நானும் நலமாய்க் கவிசெய்தேன்
பாரே உன்னைப் பலவாறு வாழ்த்த
பார்நான் உன்னை இவ்வாறு வாழ்த்துகிறேன்
சீரே பிறழாது வெண்பா நான்செய்ய
செராய் உன்னருள் சாற்றுவாய் அம்மா
பாரேன் உனதுதாள் பற்றுகிறேன்
பாவியேன் கவியில் பிழைகள் பொறுப்பாயே !

-விவேக்பாரதி
22.03.2015

Comments

Popular Posts