பொறியின்மை பழியன்று

எழுந்து வாடா மானிடனே ! - உன்
   எழுச்சி காட்டு வானிடமே !
விழுந்திட நீயும் விதையல்ல ! - பெரும்
   விருட்சம் நீதான் சிதையல்ல !

காலை யிழந்தால் கையுண்டு - அட
   கண்ணை இழந்தால் காதுண்டு
தோலை யிழந்தால் எலும்புண்டு - வா !
   தோல்வி யிழப்போம் செயமுண்டு !

நம்பிக்கை என்னும் கையிருந்தால் - ஒரு
   நசையறு மதியுடன் மெய்யிருந்தால்
அம்புவி கூடஉன் கையோடு - மிக
   அழகாய்ச் சுழலும் ! போராடு !

வாழ்ந்திடத் தானே வாழ்க்கையடா ! - அதில்
   வந்திடும் துன்பம் வேட்கையடா !
தாழ்ந்திடத் தானா நீபிறந்தாய்? - பின்
   தலையை ஏன்தான் குனிகின்றாய் ?

பொறியில்லை என்றால் கவலையென்ன ? - வெறும்
   போட்டி மிகுந்தஇவ் வுலகினிலே
நெறியது கொண்டே நெஞ்சுயர்த்து ! - உனை
   நெரித்திடும் தீயை எரித்துவிடு !

தளரா முயற்சி அதுவிருந்தால் - உடன்
   தன்னம் பிக்கை மதுவிருந்தால்
வளரா பொறியால் செய்யுவதை - மன
   வன்மையி னாலே செய்திடலாம் !

பொறியின்மை யார்க்கும் பழியன்று - ஒரு
   போக்கில் லாமை பெரும்பழியாம் !
வறுமை நிலையொரு பிழையன்று - மன
   வலிமையி லாமை பிழையாமே !

-விவேக்பாரதி
22.01.2016

Comments

Popular Posts