கவிதை எழுதப் பழகிடுங்கள்

ம்ம்ம்.....
வாருங்கள் தோழர்களே !!
வளைவுடைய தோழிகளே !!

எல்லோரும்
கவிதை எழுதிடப்
பழகிடுங்கள்.....!

ஒவ்வொரு கவிதையுமே
ஒவ்வொரு சுவைதரும் !

யார் இங்கே
உன்னதக் கவிஞன் ?
எல்லோரும் தான் ....!

அவரவரது உள்ளத்தை
ஆழ உழுது
ஆர்வ விதையிடும்
எல்லா விசயமுமே
அவரவர்க்குக் கவிதை தான் !

மண்ணை உழுது
மணமான விதையிட்டு
ஏற்ற நீர் பாய்ச்சிக்
களை எடுக்கும்
அறுவடை !!!
உழவனின் கவிதை !!

வெற்றுப் பாறையை
வேக உளி கொண்டு
சற்றும் தளராது
சகல கலைகளையும் காட்டத்
தோன்றும் சிற்பம்
சிற்பியின் கவிதை !!

மையிட்ட கண்ணால்
மனதினைப் பெண் கவர
ஆணுக்குத் தோன்றும்
அனுபவக் காதல்
பருவத்தின் கவிதை !!

சில கவிதை சந்தோஷம் !!!
சில கவிதை ஜலதோஷம் !!!

ஆனால்
எல்லாக் கவிதைகளும்
கண்ணில் துவங்கிக்
கருத்தில் வளர்ந்துக்
காகிதத்தில் முடிகின்றன !!

இங்கே
கவிதைகளுக்கு எப்பொழுதும்
கேட்பவரை மயக்கிவிடும்
ஒரு இயல்பு உள்ளது....!

தோழர்களே !!!

சிந்தும் வார்த்தைகளைச்
சல்லடை இட்டுப் பொறுக்கி
அடுக்குகளில் அடிகளைக் கோர்த்துக்
கவிதை என்று
யாரேனும் சொன்னால்
அவற்றை ஆதரிக்காதீர்கள் !!!!

அவை எல்லாம்
கவிதைகள் அல்ல
சொற்கள் !! சொல்லப் போனால்
வெறும் கற்கள் !!

உள்ளத்து விளிம்பிலிருந்து
உயர்ந்து வான் நோக்கி
மெல்லச் சிறகசைத்து
மேலே பறக்கத் துடிக்கும்
உணர்வுகளே
உண்மையான கவிதை !!

தோழர்களே
கவிதை எழுதிடப்
பழகிடுங்கள் !!!

நல்ல கவிதை
மூளை விட்டு அல்ல
இதயம் தொட்டுப்
புறப்படுகின்றன !

அன்பர்களே !

கவிதை
காதலியின் அழகை மட்டும்
விரிக்கும் கலையல்ல !!

கனலாய்ப் பாயும்
சமூகச் சரிவுகளை
நேராக்கும் *சிலை !!!

தோழியரே !!!

கவிதை
காதலனுக்கு அனுப்பும்
தூதன் மட்டும் அல்ல !

இயற்கைப் பாகுபாடுகளை
ஆக்கும் இழிவுகளை
விழுங்கும் பூதம் !

கவிதைகள்
உலகத்து உண்மைகளை
உயர்வுடனே வெளிப்படுத்தக்
கிளம்பும்
பருந்துப் பறவைகள் !!

எதுகை, மோனை,
இயைபு, தொட்டே
கவிதை எழுதப்படட்டும்
என்ற
விதி எல்லாம் தள்.........ளி

எது உயிர் ! எது உணர்வு !
என்று பார்த்தறிந்து கொள்ளும்
கவிதைகளே
உயிர்கிறது இற்றை நாட்களில் !!

ஆம்
தோழர்களே !!
கவிதை எழுதப்
பழகிடுங்கள் !!!

காரிகை தொட்டுக்
காப்பும் இட்டுக்
காவியம் படைக்கச் சொல்லவில்லை !!

எதுகை, மோனை
இயைபு, மரபு
எல்லாமே கவிதைப் பெண்ணின்
ஆடை ஆபரணங்கள் !!!

நாம் நமது
கவிதைப் பெண்ணை
எத்தனை நாட்கள்
நிர்வாணமாகப் பார்ப்பது ???

பட்டுப் பீதாம்பரமும்,
கட்டி விளையாட
ஒட்டியானங்களும் தாருங்கள் !!!

"முழுக்க முழுக்க
மரபின் இலக்கணத்தைப் படியுங்கள்" !

"முழுக்க முழுக்க
மரபிலே படையுங்கள்"
என்று சொல்ல மாட்டேன் - அது
தங்கள் விருப்பம் !!

ஆனால்
ஒன்று சொல்கிறேன் !!
மரபைப் படித்து
நீங்கள்
புதுக்கவி எழுதினால்...

புதியதொரு மாற்றம் உணர்வீர்
புதியதொரு தோற்றம் புணர்வீர்
புதியதொரு ஆற்றல் புனைவீர் !

ஆம் நிச்சயம்...

வாருங்கள்
நண்பர்களே !!
கவிதை எழுதிடப் பழகிடுங்கள் !!!!

-விவேக்பாரதி
18.08.2015

Comments

Popular Posts