பாரதி பிறந்தான்

பாரதி வந்துதித்தான் - இந்தப்
   பாரிடை துன்பங்கள் மாய்ந்ததம்மா !
யாரவர் இங்குளரோ - இந்த
   யாப்புக் கவிஞனை மிஞ்சிடவே !
நாரதர் கானமென - நல்ல
   நற்றமிழ் தூவிடும் வானமெனச்
சீருடன் வந்தவன்தான் - இந்தச்
   சித்திர பானுவி லுதித்தவன்காண் !

கன்னங் கரியதுவாய் - நின்ற
   காரிருள் வானத் திடலினிலே
இன்னல் களைவதுவாய் - அந்த
   இந்துவை ஒத்த ஒளிர்மதியாய்
முன்னம் உதித்தவன்காண் - நல்ல
   முத்தமிழ்க் கவிதையின் நாயகனாம்
சின்ன வயதுமுதல் - பாக்கள்
   சிந்திடும் வித்தகன் பாரதிகாண் ! (பாரதி..)

சக்திக் கொருபுலவன் - பொங்கும்
   சாகர மொத்த கவிவளவன் !
பக்திக் கொருகவிஞன் - இந்தப்
   பாரினுக் கேற்ற தமிழ்மறவன்
முக்கனி யொத்ததுவாய் - இன்பம்
   முழுவது மள்ளிக் கொடுப்பதுவாய்
மிக்கக் கவிசொலுவான் - சோதி
   மின்னிடும் மாகவி பாரதியே ! (பாரதி..)

-விவேக்பாரதி
11.12.2015

Comments

Popular Posts