காதல் பிழை - கஜல் கவிதை

மௌனத்தின் ராகத்தில் பண்பாடிச் சென்றோம்
மெதுவாக இதமாகக் கலந்தாடி நின்றோம் !

கானத்தின் மத்தியிலே கார்மேக இடியாய்க்
காதலெனும் பிரிவினிலே விலகி நாம் சென்றோம் !

வாவென்று நீசொல்ல விழியேறி வந்தேன்
வளமான நற்காதல் கனவாகத் தந்தேன்

போவென்னும் சொல்லாலே நீ மாய்த்த நேரம்
போக்கற்றக் காற்றாகத் திசைமாறி நொந்தேன் !

வலியோடு செல்கிறது என் வாழ்வின் மிச்சம்
வழிமாறிப் போயாச்சே இனியென்ன அச்சம் ?

ஒலியோடு சேராத மெதுவான தொணியில்
அழுதபடி செல்கிறது வாழ்நாளின் எச்சம் !

இடையோடு முத்தமிட இயலாத நேரம்
இமையோரம் சிரப்பூஞ்சிக் கார்காலம் நேரும்

நடைபோடத் தெரியாத காற்றுக்குக் கூட
நயமாகப் புரிகிறது என் கண்ணின் ஈரம் !

நீயற்ற என் நெஞ்சம் நடமாடும் சூலை
நீர் கூட இல்லாச் சகாராவின் சாலை

பூவற்றுப் போனாலே பூமிக்குள் இங்கே
புன்னகை தான் செய்திடுமோ பூப்பூத்த சோலை ?

காட்சிகளே பிழையானால் கண்ணெங்கே போகக்
காதலிங்கு பிழையாக ! மனம் வலியில் நோகச்

சாட்சிக்கோ யாருண்டு ? என்காதல் சொல்லச்
சாதலினைக் கூப்பிட்டேன் உயர் சாட்சி யாக !

பிரிவுதனைத் தீர்த்திடவே மருந்தாக வாராய்
பிரியத்தான் வேண்டுமெனில் நஞ்சை நீ தாராய் !

-விவேக்பாரதி
26.01.2016

Comments

Popular Posts