மலருக்கு

மலரே !
இன்னும் என்ன
மௌனம் ?

என்னுடன் கொஞ்சம்
பேசு !

எத்தனை நட்கள்
இப்படியே இருக்கப்
போகின்றாய் ?

காற்றினில்
மணமென்னும்
கவிதையை யாக்கின்ற
காரிகை நீ !

துயிலெழு
துடித்தெழு !

உன்றன்
தூக்கம் கலைக்க
நானொன்றும்
திருப்பள்ளி எழுச்சி
பாடவில்லை !

உன்றன்
துக்கம் கலைக்கத்
திருப்புமுனை எழுச்சி
பாடுகின்றேன் !

இந்த உலகத்தில்
உன்னைப் போல
ஒரு பிறப்பைக்
காண்பதும் அரிது !
பூண்பதும் அரிது !

செடிக் குடும்பத்தில்
நீயொரு பருவப் பெண்ணாக
உருவெடுக்கின்றாய் !

வசந்த காலங்களில்
பூப்பெய்தி
தினமும் மொட்டாய்
மூடி மூடி
முகிழ்கின்றாய் !

அப்படி
மொட்டாகி முகிழும் உன்னை
மட்டோடு காண்பது
பரவசமானது !

உன் குடும்பத்து
உற்சாகப் பெண்ணாக
உருவெடுக்கும் உனக்குக்
கல்யானம் செய்து கொடுக்கத்
தவமாய்த் தவம் கிடக்கிறாள்
உன் தாயான வேர் !

கூடப் பிறந்த
அண்ணன்களான
இலைகளோ...
சதா உணவு சமைக்கும்
உற்சவத்திலேயே
சோர்ந்து விடுகின்றனர் !

நீயோ !
புதுப்பொலிவு எய்தி
நாளும்
புன்னகைத்த வண்ணமே
இருக்கிறாய் !
புதிரறியாதவளாய் !

வசந்த அழைப்பே !

உனக்கு மட்டும்
என்னே ஒரு மனது ?

உன்னைக் கவர வருகின்ற
வண்டு வாலிபர்களை
நீ
கயவராகப் பார்ப்பதில்லை !
உன்
கணவராகப் பார்கின்றாய் !

உன்னிடம் இருக்கும் தேனை
உறிஞ்சிக் குடித்துவிட்டு
உனக்குள்
மகரந்த விந்தை மட்டும்
உதறிவிட்டுச் செல்லும்
கணவர்களைப்
பிரிவில் எண்ணியே
வாடுகின்றாயோ ?

உனது ஒற்றைக்கால்
தவத்தினை
ஊரே அறியும் !
ஆனால்
அதன் வரத்தினைத் தான்
யாரும் அறியார் !

மலரே !
நிழலில் துவங்கி
நீர் வரையில்
எல்லாவற்றிற்கும்
உதாரணமாகும்
உன்றன் உறவுகள்
உன்னை உதாரணமாக்குவதோ
உன் தேகத்திற்காகத்தான் !

உன் குடும்பத்திலேயே
நீ ஒருத்தி தான்
அழகி என்பதாலா ?

இல்லை ...

உன் குடும்பத்திலேயே
நீ மட்டுந்தான்
ஏமாளி என்பதால் !

மொட்டாகி மலர்ந்ததும்
உன்னை
எத்துணை எழிலுடன்
வெளிப்படுத்துகின்றாய் !

அதன் விளைவாகவே
உன் அழகை
நீயே இழக்கின்றாய் !

கவரும் உருவே !

வண்டுக் கணவர்கள்
உன்னைத்
தீண்டிச் சென்றதும்
செண்டு நீ
குண்டாகின்றாய் !
பெருத்து, அழகிழந்து
வேறுருவாக உண்டாகின்றாய் !

விதைக்கு வித்தாகின்றாய் !
மற்றொரு செடியைத் தாங்கும்
கருவாகின்றாய் !

கனியாகின்றாய் !

கனியாகும் நீ !
உன் தோலிழந்து,
சதையிழந்து,
விதையை வெளியே பிரசவித்து
இறக்கின்றாய் !

விதை இன்னொரு
மரமாய் முளைக்குமென்றா ?

உன் தியாகத்தை நீ
இவ்வாறு கணிப்பது
சரியா ?

யோசி !

இற்றை நாட்களில்
உன் தியாகம்
வீணாகப் போவதை
நீ அறிவாயா ?

ஆம் தோழி !
நீ உன்னைத்
தியாகம் செய்து
பிறக்கும் விதை,
வெறும்
விதைகளாகவே மாண்டு
விழுகின்றன !

அவை மரங்களாக
ஆகுவதில்லை !

ஏனெனில்
அவற்றை யாரும்
மரங்களாக
ஆக்குவதில்லை !

மரங்களாக்க
இங்கே மண்ணில் முதலில்
இடமே இல்லை !

அப்படியே மரமானாலும்
வேருக்கு நீர்வார்க்கும்
மக்களை விட
எம்போல்
வேரோடு பறிக்கும் மக்களே
அதிகம் !
இவ்வுலகில் !

வண்ணத்தின் வங்கியே !

ஏனிந்த மௌனம் ?

நீ இந்த பூமிக்கென
நன்மை சொரிந்து
நலம் கொடுத்ததெல்லாம்
போதும் !

வா ! என் சொல் கேள் !

நான் வாழ
வழி சொல்லவில்லை !

உலகை ஆள
வழி சொல்கின்றேன் !

பூவே !
ஓருபாயம் நிகழ்த்து !
மலர்ந்ததும் நீ கொள்ளும்
மகரந்தச் சேர்க்கை
நிறுத்து !

உன்னைத் தீண்ட வரும்
வண்டுக் கணவர்களை
அண்ட விடாதே !

உண்ணா விரதம் போல
நீயும்
உறவு கொள்ளா
விரதம் மேற்கொள் !

நறுமணச் சுரபியே !

பூவென்றால்
எத்தனை நாள்
புன்னகை , புனிதம்
என்பார்கள் ?
புரட்சியும் தானென்று
காட்டு !

காலங் காட்டும் கண்ணாடியே !

உன் ஒற்றைக்கால்
பூக்கம்பத்தில்
பூகம்பம் பொறுத்து !

நெறுங்கி வருபவர்
நொறுங்கி வீழட்டும் !

மெல்லியலே !

சிரிக்க மட்டுமே
நிறம் மாறுகின்றாய் !
சினக்கவும்
நிறம் மாறு !

மண்ணில் மரம் வளர
இட ஒதுக்கீடு
செய்யும் வரை...

வீணாக மரங்களை
வெட்டுதல் நிறுத்த
ஒரு சட்டம் பிறக்கும் வரை...

புலன் சேர்க்கை களைவாய் !
பூவே !
நீ சன்யாசம் புனைவாய் !

மலரே !
நான் உன் மொழி அறியேன் !

ஆதலால் தான்
உனக்கிதை உன்றன்
மடலில் எழுதிவிட்டு செல்கின்றேன் !

புரிந்து கொண்டால்
உன்னைத் தழுவும் காற்றைப்
படிக்கச் சொல் !

அது உலகத்திடம் இந்த
செய்தியைக்
கொண்டு சேர்க்கட்டும் !

-விவேக்பாரதி
01.04.2016

Comments

Popular Posts