தேசத்தைக் காப்பவள் மாரி


எங்கும் எதிலும் மற்றெல்லா விடத்திலும் 
   சக்தியைக் காணுகிறேன் - அதனால்  
   முக்தியைப் பூணுகிறேன்! வானின் 
மங்குலிலே மழைச்சாரலிலே யவள் 
   மாநடம் செய்கின்றாள் - நல்ல 
   மானிடம் செய்கின்றாள்! 

பச்சை நிறங்கொண்ட வேப்பிலையில், அவள் 
   உருவம் காணுகிறேன் - இளகிடும்  
   கருவம் காணுகிறேன்! என(து) 
உச்சந் தலையினைத் தீண்டிடுங் காற்றெனச்
   சக்தியவள் விரலும் - கொதிடச் 
   பக்திமிகத் திரளும்! 

நெஞ்சுக்குள்ளே அவள் நேரிய சிந்தனை 
   தன்னையும் ஆற்றுகிறாள் - அதுகொண்டு 
   என்னையும் ஏற்றுகிறாள்! பகை 
அஞ்சி நடுங்கிட அன்னை எனக்குள்ளே 
   செந்தமிழ் வீசுகிறாள்! - கவிதையில்  
   என்னுடன் பேசுகிறாள்! 

மொத்த உலகமும் முக்தி அடைந்திட 
   மோட்சத்தைத் தாவென்றேன் - அருள்மழை 
   வீசிட வாவென்றேன் - இந்தப் 
பித்தனின் விண்ணப்பம் ஏற்றுப் புவியினில் 
   பாதம் பதித்திடுவாள், - உடன்வரும் 
   சேதம் மிதித்திடுவாள்! 

தேசத்தைக் காப்பவள் மாரி என்னும்விதி 
   தேருக நெஞ்சகமே - இனியொரு 
   போரில்லை உன்னிடமே! சக்தி 
வாசக் குழல்தொடும் பூவினைப் போலொரு 
   வாழ்க்கை கிடைக்கணுமே - அதுவரை 
   வாக்கு தொடர்ந்திடுமே!! 

-விவேக்பாரதி
17.09.2015

Comments

Popular Posts