வாக்களிக்கப் போவீர்

பயிருக்கு நீரை வார்த்தல்
   பாட்டுக்குப் பண்ச மைத்தல்
வயிற்றுக்கு முணவை உண்ணல்
   வறுமைக்கோ ஈகை செய்தல்
உயிருக்கோ தேகம் காத்தல்
   உலகத்தில் அவசி யம்போல்
உயர்வுக்கு வாக்க ளித்தல்
   உன்னதந்தான் அறிதல் வேண்டும் !

தாய்மையைக் கொஞ்சல் தன்னைத்
   தானென்ற உணர்வு தன்னை
வாய்விட்டுப் பேசல் தன்னை
   வான்சிந்தும் மழைநீர் தன்னை
ஓய்வேன்னும் நேரம் தன்னை
   ஒருபோதும் விடவே மாட்டோம்
வாய்த்தவோர் உரிமை யாமிவ்
   வாக்களித்தல் மறக்க லாமா ?

காசுக்கு வாக்கை விற்றல்
   கனியொன்றின் சாற்றை அற்ப
மாசுக்குள் விடுதல் போலே
   மாபெரும் ஈன மாகும் !
நாசத்தைத் தடுக்க ! வாழும்
   நாட்டுக்குள் உண்மை ஓங்கத்
தேசுடை உரிமை வாக்கைத்
   தேயத்திற் களித்தல் வேண்டும் !

மேடைகள் போட்டுச் ! சொல்லின்
   மேன்மைகள் பலவாய்ப் பேசி
ஜாடைகள் செய்வார் தம்மின்
   ஜாலங்கள் மதித்தல் வேண்டா !
ஓடைகள் போலே சேற்றில்
   ஓடிடும் மீன்கள் உண்டே !
தேடித்தான் வாக்க ளிப்போம்
   தேவைவாக் களிக்கும் எண்ணம் !

கூட்டணி அமைப்பார் ! நன்காய்க்
   கொள்கைகள் மொழிந்து நிற்பார் !
நாட்டினை வளர்க்க வல்ல
   நல்வழி அறிவோம் என்பார் !
காட்டிடும் காட்சி யாவும்
   கண்மூடி நம்ப வேண்டா !
வேட்பாளர் தமையு ணர்தல்
   வேண்டுமே வாக்க ளிக்க !

ஆதலால் மக்காள் ! வாக்கும்
   அவசியம் நாட்டில் காண்க !
சேதமில் லாதோர் நாடு
   செழுமையில் கிடைத்தல் வேண்டில்
வாதமே செய்தி டாது
   வாக்கினை அளிக்கப் போவீர் !
காதலை நாட்டின் மேலே
   காட்டவாக் களிக்கப் போவீர் !

-விவேக்பாரதி
24.04.2016

Comments

Popular Posts