விநாயகப் பஞ்சகம்

முதல்வனை வேத முணர்ந்தவனைச் சக்தி
புதல்வனை வாழ்த்திடு பூவே - பதந்தரும்
தேவனை ஞானத்தின் தேக்கினை யாம்தொழ
மேவி யவன்பதம் மெச்சு !

மெச்சினள் ஔவையும் மேலென் றவன்பதம்
நச்செனப் பற்றினால் நலம்வருமே - பச்சிளம்
பூவே விநாயகன் பூங்கழலைத் தாந்தழுவி
நீவேண்டு விண்ணோர் நிலை !

நிலையென வேதம் நிறுத்தினான் பாதம்
நிலையெனப் போற்றிடு நீயும் - மலைமீது
வீற்றிருக்கை செய்கின்ற வீரனவன் தாள்சேர்ந்தே
ஏற்றிடுவை பூவே எழில் !

எழிலன் தமையன் எவர்க்கும் கருணைப்
பொழிலை வழங்கிடும் போகன் - கழலிணையும்
சென்றே எழிலைநீ சேர்த்திடுவை பூமலரே
நின்றவன் பாதம் நிறை !

நிறைந்த ஒளிப்பொருளை நீங்காதெப் போதும்
மறையைப் பயில்வான் மலர்த்தாள் - நிறைப்பாய் !
பழுதற்ற நாயகனெம் பஞ்சகத்தைக் காப்பான்
முழுதிற்கும் அன்னோன் முதல் !

-விவேக்பாரதி
17.09.2015

Comments

Popular Posts