பிள்ளைக்கவி

பாசமழலை
பேசவந்த பாப்பா - நித்தம்
   பாற்கடலில் ஆடுவையோ பாப்பா !
நேசமுழுதும்
வீசவந்த பாப்பா - நீயும்
   வெண்ணிலாவின் மகளோசொல் பாப்பா !

காசினியில்
ஆசுகவி எல்லாம் - உன்றன்
   அகத்தழகை முகத்தழகைக் கண்டு
பேசிடவோர்
பாசையின்றிப் போவார் - உன்னைப் 
   பாடிடவே ஆயத்தமா யாவார் !

தத்தக்கா
பித்தக்கா என்று - நீயும்
   பித்துமொழி பேசுகின்ற நேரம்
முத்தத்தேன்
முத்தமிழாய் வந்து - என்னை
   மோனத்தி லாழ்த்துதடி பாப்பா !

கத்தித்தான்
தித்தித்தோ மென்று - அலறித்
   திணறுகிறாய் கதறுகிறாய் பாப்பா !
நித்தந்தான்
அத்துமிசை போலே - என்றன்
   ஆறறிவில் ஊறுதடி பாப்பா !

பஞ்சுக்கால்
மஞ்சுக்கே ஒப்பு - ஏறி
   மார்மீது மிதிக்கையிலே பாப்பா
கொஞ்சத்தான்
அஞ்சித்தான் வந்தேன் - நீயும்
   அழுதுவிட லாகாதே பாப்பா !

நஞ்சுன்றன்
பிஞ்சுக்கை பட்டால் - தனது
   பிழைவிட்டு நல்லமுத மாகும்
கொஞ்சந்தான்
பஞ்சத்தில் உள்ளேன் - நின்னைப்
   பாடபொருள் தேடுவதில் பாப்பா !


-விவேக்பாரதி
06.05.2015

Comments

Popular Posts