சென்னை மழை

தண்ணீருக் காக தவித்திருந்த சென்னையைக்
கண்ணாலே தேடுகிறேன் காணவில்லை ! - தண்ணீரில்
மூழ்கித் திழைக்கும் முதுநகரம் காணுகிறேன் !
தாழ்விடத்தில் தண்ணீர்த் திரள் !

வருண பகவானே வாவேன்றோர் எல்லாம்
தருவதுவும் போதுமெனச் சொல்லி - ஒருமனுவை
வைக்கின்ற காலந்தான் வந்ததுவே ! தண்ணீரும்
மொய்க்கின்ற சென்னை முகை !

சாலை வெளியெங்கும் சாகரமே வந்ததுபோல்
கோலம் தெரிகிறதே கோரமடா ! - மாலைபோல்
மத்தியான வேளையதும் மாறுதுவே ! சென்னைமழை
தத்திவர உண்டோ தடை ?

கொளுத்தும் வெயில்கக்கும் கொண்டல்வான் சற்றே
வெளுத்துக் கருநிறம் வேண்டித் - திளைத்துவிட !
கார்காலம் கொண்ட கடும்புயல் காற்றுக்குக்
போர்காலத் திட்டம் பொது !






(சென்னையில் பெருமழை வந்தது கண்டு எழுதியவை)

-விவேக்பாரதி
02.12.2015

Comments

Popular Posts