காளி அழைப்பு

நடுநிசிதான் அந்தக்காளி அழைப்பு - அவள்
நர்த்தனமெல் லாங்கவிதை மலைப்பு - கொஞ்சும்
   நாட்டியத் தடாதகையின் 
   கோட்டிடையில் துள்ளுகின்ற
நல்லமணி ஆகிவிழ நினைப்பு! - அது  
நடக்கும்நாள் தீர்ந்துபோகும் பிழைப்பு

அடுங்காலன் கூட்டுசேர்ந்த தொடக்கம் - அவள்
ஆட்டத்துள் அண்டமெல்லாம் அடக்கம் - சிவன்
   ஆடவல்ல பாவனைகள் 
   போடவல்ல பார்வதியாள்
ஆடவில்லை நாணத்தின் முழக்கம் - அது
ஆண்டவருள் பூத்தகாதல் பழக்கம்! (1)

எண்ணமெல்லாம் சக்திதரும் மிடுக்கு - ஒளி
ஏந்திவரும் வெள்ளிரத அடுக்கு - அதில்
    ஏறிவரும் காரிகையள்
   கோருமடி யார்க்கடியாள்
எந்தலைவி ஆதிசக்தி துடிப்பு! - அது
எங்கவலை யாவினுக்கும் முடிப்பு

விண்ணுலகும் மண்ணுலகும் வியக்கும் - அவள்
வித்தைகண்டு மொத்தமும்வாய் பிளக்கும் - எழில்
    வீறுநடை கோலயிடை
    ஜாலநடம் காலனிடம்
வீரியமாய்க் கேட்கும்ஜதி முழக்கம்! - அதன்
விந்தையினால் எவ்வுயிரும் ஜனிக்கும்! (2)

நீலமணி ஆடைசற்று பறக்கும் - அந்த
நீலிநடம் விண்ணெரிய நடக்கும் - திரு
    நீறுமணம் குங்குமமும்
   மேகமழை யாகிவந்து
நீர்நிலையெல் லாம்விழுந்து மணக்கும் - அந்த
நித்தியத்தில் இயற்கைநலம் பிழைக்கும்...

காலமெனும் புரவியேறி நடத்தும் - எழில்
காளிநடம் தெரிவதில்லை எவர்க்கும்! - சுடும்
    காமவெறி மோகநெடி
   ஏதுமிலாத் தூயர்களின்
கண்களுக்குள் அந்தநடம் வெளிச்சம் - இவை
காளியெனும் ஆதிசக்தி விளக்கம்!! (3)

-விவேக்பாரதி 
05.01.2018

Comments

Popular Posts