நிஜ பாதம்

பக்கத்துப் பெருமாள் கோவிலில் நேற்று நிஜபாத தரிசனம்...பாதம் கண்ட மாத்திரம் பாட்டு வந்தது...


கால் தெரிய வேண்டுமையா! - என்றன்
கண்கண்ட மாத்திரம் மண்கண்டு விண்கண்ட
கால் தெரிய வேண்டுமையா!!


பால்கொண்ட பக்தியாலே - இந்தப்
    பாலகன் இங்ஙணம் பாடுகின்றேன்!
நாள்கண்ட என்றன் நெஞ்சில் - சேரும்
    நாசத்தை நீக்கியே காத்திடத்தான்! உன்றன் (கால் தெரிய...)

மாவலியின் தலைகண்ட கால் - கம்ச
    மாமனின் மாரிலே பதியுண்ட கால்
தேவதை அகலிகை தம் - சாபம்
    தேய்த்திட்ட மாய்த்திட்ட தெய்வமே நின்னருங் ( கால் தெரிய...)

காட்டில் நுழைந்திட்ட கால் - அந்தக்
    காளிங்கன் மேலே குதித்திட்ட கால்
நீட்டிய பாம்பணை மேல் - லக்‌ஷ்மி
    நித்தமும் தொட்டுப் பிடிக்கின்ற அற்புதக் (கால் தெரிய...)

கல்வியில் வலியனில்லை - கொண்ட
    கடமையைச் சரிவரச் செய்ததில்லை
சொல்லவும் நல்லனில்லை - அற்பச்
    சுகபோகம் போக்காத சின்னவன் கதிசேரக் (கால் தெரிய...)

நாரணா நின்றன் நாமம் - எந்த
    நாளுமே சொல்லிடும் பேறுவேண்டும்!
சீரகம் மட்டும் வேண்டும் - இவை
    சித்திக்க நான்வீழ்ந்து போற்றிப் புகழ்ந்திடக் (கால் தெரிய....)

-விவேக்பாரதி
16.01.2018

Comments

Popular Posts