கல்வி பக்தி

மதிப்பெண்ணை உண்கின்ற மதிகெட்ட அசுரர்கள்
      மண்மீது வாழு கின்றார்! 
  மனசாட்சி இல்லாமல் தன்பிள்ளை ஞானத்தில்
      மண்மூட்டை ஏற்று கின்றார்!
பதம்வைத்து மாறாத பச்சிளம் பிள்ளையைப்
      பள்ளியில் வீசு கின்றார்!
  பக்குவம் என்கின்ற பேர்சொல்லி ஊருக்குள்
      பலசொற்கள் பேசு கின்றார்!
குதித்துவிளை யாடிடவும் இடமின்றி மாடியின்
      கூட்டுக்குள் பூட்டு கின்றார்!
  குணம்கெட்ட இணையத்தின் உபகரணம் யாவையும்
      கொடுத்துதான் ஊட்டு கின்றார்!
எதுசரி தவறென்று யோசிக்க முடியாத
      எண்ணத்தைக் கல்வி யென்றே,
  எடுத்தள்ளிக் கொட்டிடும் அசுரர்கள் மத்தியில்
      ஏன்வந்து பிறந்தா யடி?

யார்தந்த சாபமோ? ஆண்டவனின் பாவமோ?
      யாழிங்கு பூழ்திக் குள்ளோ?
  யாதுன்றன் தீச்செயல் எதற்கிந்த தண்டனை
     யாருக்கு என்ன செய்தாய்?
போர்செய்து கொலைசெய்த போழ்துகள் மாறிடப்
      போதத்தைக் கொடுக்கா மலே,
  போக்குகள் காட்டியே அடிமைகள் ஆக்கிடும்
      பொல்லாத புவிதா னடி!
நேர்கின்ற எண்ணத்தை நசுக்கிடும் கல்வியை
      நேரத்து விளம்ப ரத்தால்,
  நெளிவோடு சுழுவோடு விற்கிறார் வாங்குவார்
      நெஞ்சத்தில் பிழைதா னடி!
கூர்கொண்ட வாளினைக் கூற்றினால் தீட்டடி
      குத்தட்டும் உன்றன் கத்தி!
  கொளுத்தடி கண்கொண்ட ஜ்வாலையால்! வையகம்
      கொள்ளட்டும் கல்வி பக்தி!

-விவேக்பாரதி
03.01.2018

Comments

Popular Posts