உங்களில் ஒருவன்

நான் உங்களில் ஒருவன்தான்,
ஏன் ஒதுங்கிச் செல்கின்றீர்?
இவன் ஊமைக் கவிஞனென
ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்?
என் பாட்டும் பரவசம் தான்!
ஏன் பயந்து போகின்றீர்?
அட! நானும் உம் இனம் தான்!
ஏன் வியந்து பார்க்கின்றீர்?


கடவுள் சிறகைத் தமக்குக் கொடுத்தான்
கவிதை எனக்குக் கொடுத்துவிட்டான்!
கனிவாய் குரலை உமக்குக் கொடுத்தான்
கற்பனை எனக்குக் கொடுத்துவிட்டான்!
திடமாய்த் தினமும் பாடிப் பாடிச்
சாதனை செய்யும் பறவைகளே!
சரியாய்ச் சொன்னால் நீரென் தோளில்
சாயும் தோழி உறவுகளே!

நான் உங்களில் ஒருவன் தான்....

மேலே எழும்பிக் கீழே நொறுங்கி
மேனி நனைப்பது உம்வேலை
மெல்ல எழுந்து வியந்து விழுந்து
மேலடி படுவது என்வேலை!
ஆலைக் காற்றில் அசைந்து நடந்து
அமைதி காணும் அலைகளே...
அணுகிப் பார்த்தால் நமக்குள் உறவோ,
அண்ணன் தம்பி நிலைகளே!

நான் உங்களில் ஒருவன் தான்...

அற்புத மான அதிசய உலகில்
அகப்ப டாத வாழ்வுமக்கு,
அவ்வப் போது தம்மிடம் கண்டு
அதனியல் பாடும் வாழ்வெனக்கு!
கற்பனை உலகில் கால்கள் நீட்டிக்
கணக்குப் போடும் தேவர்களே...
கணித்துப் பார்த்தால் நீரும் நானும்
கடமையி னால்சக தோழர்களே!

ஆம்!!
நான் உங்களில் ஒருவன்தான்,
ஏன் ஒதுங்கிச் செல்கின்றீர்?
இவன் ஊமைக் கவிஞனென
ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்?
என் பாட்டும் பரவசம் தான்!
ஏன் பயந்து போகின்றீர்?
அட! நானும் உம் இனம் தான்!
ஏன் வியந்து பார்க்கின்றீர்??

-விவேக்பாரதி
12.01.2018

Comments

Popular Posts