கற்பகத் தமிழ் காப்பு

இயலிசை நாடகம் இன்றைய கணினியொடு
உயிர்த்தனை நான்காய் உயர்த்தமிழ் அன்னாய்!
நின்மேல் காதல் நிகழ்த்திய(து) அல்லால்
என்செய் தேனெனை எழுதிட வைத்துப்
பற்பல காட்சிகள் படிக்கக் கொடுத்துச்
சொற்பதந் தந்து சுடர்தரு கின்றனை! 

நின்னைப் புசித்தே நினைவை அழித்தேன்! 
உன்மேல் பக்தி உயரக் களித்தேன்!
காணாக் கற்பனை கவிநயம் யாவையும், 
தேனாய் நெஞ்சில் தெளித்து வளர்த்தனை! 
அம்மா எனும்சொல் அலறிப் பிதற்ற 
இம்மா வரத்தை இயற்றிக் கொடுத்தனை! 

அள்ளக் குறையா அட்சயக் கலனே! 
விள்ள முடியா விந்தை மொழியே! 
உயிரே! உணர்வில் ஊறும் ஒளியே! 
வியப்பே! விண்ணே! விரிவாய் மலரே! 
கற்பக மே!யென் கவிதை
அற்புத மாக அமைக்கநற் காப்பே!!

விவேக்பாரதி
07-01-2018

Comments

Popular Posts