உயிருக்கென்ன இலக்கணம்??

பாதைகள்
மாறிச் செல்கின்றன
நான் மட்டும்
வாகனத்தை மாற்றவில்லை!


பயணங்கள்
நீண்டு திளைக்கின்றன
நான் மட்டும்
ஓட்டுவதை நிறுத்தவில்லை!

எதற்குத் தொடங்கி?
எங்கே அடங்க?
இனம் புரியாத பயணம்!
இடையே ஈரச் சலனம்!

யாரைத் தொடர?
யார்க்கு வழிவிட?
யாதும் அறியாப் பயணம்!
எனக்குள் நானே மரணம்!

காற்றைப் பார்க்கிறேன்
அதைப்போல் கடுகி ஓடக்
கால்கள் தேற்றி
விசையைக் கூட்டிக்
கடக்க முற்பட
மனது பாரமாகிப்
பறக்க விடாமல் செய்ய
பொத்தென்று விழுகிறேன்!

நீரைப் பார்க்கிறேன்!
கணமான உடலால்
நீச்சலிட எத்தனிட்டு
உடலைக் குறுக்கி
மீனாய் வளைத்துக்
காலாட்ட நினைக்கையில்
மனம் இலேசாகி
மிதக்க வைத்து விட
தத்தளித்துக் கிடக்கிறேன்!

மூச்சுத் திணறி
காற்றுக்கும் நீருக்கும் இடையில்
நைந்த உடல் ஆடையை
ஆன்மா உரித்துப் போட
அம்மனத் தோற்றத்தில்
காளி தரிசனம் ஆகிறது!

கண்கள் மூடி
நான் விழுந்து கிடக்க
என் ஒளித்திரையில்
அந்த நெருப்புக் கருப்பு நிழல்
கால் பதிக்கிறது!

மயான அமைதியிலே
அவள் மலர்ச்சதங்கை மட்டும்
சந்தமெனக் கேட்க
உயிர் கவிதை எழுதுகிறது!
உயிருக்கென்ன
இலக்கணமா தெரியும்??

-விவேக்பாரதி
20.01.2018

Comments

Popular Posts