கவிதை ஆண்டாள் - 2
காலை இளஞ் சூரியனின் ஒளி வீசும் அந்தத் துளசி மாடத்துக்குப் பக்கத்திலே அமர்ந்து கொண்டிருக்கிறார் விஷ்ணு சித்தர். கையில் மணம் பெறப் போகின்ற வாழை நார், அருகில் கூடை நிறைய அவர் தோட்டத்து மலர்கள். கையில் ஒவ்வொன்றாய் எடுத்துத் தொடுக்கின்றார். இவள் நடக்கிறாளா? பறக்கிறாளா? என்பது கூடப் புலப்படாத அளவிற்கு அப்படியொரு நடையுடன் ஒருத்தி துள்ளிக் குதித்து வருகின்றாள். அவளே விஷ்ணு சித்தரின் மகள் கோதை நாச்சியார். அங்கே வந்து அவர் அருகில் அமர்கின்றாள்.
கோதை: “அப்பா அப்பா! எனக்கொன்னு தெரியணும்! சொல்லுவேளா??”
விஷ்ணு சித்தர்: “என்னடி கண்ணம்மா வேணும்?...பேஷா சொல்றேன்! என்ன வேணுமோ
கேளு கோந்தே!”
சின்னஞ் சிறிய கிளியான அந்தக் கோதை, கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு கேள்வி கேட்டாள்...
கோதை: ”அப்பா எனக்குக் கண்ணனப் பத்தி சொல்லுங்கோளேன்! கேக்கணும்
னு ஆசையா இருக்கு….”
கலைகள் அனைத்திலும் வல்லவரான அந்த விஷ்ணு சித்தருக்கே கண்ணபிரானை
விளக்கிச் சொல்லுதல் எறும்புமேல் வைத்த பனைவெல்லம் போன்றாதாகும். ஒரு நிமிடம் திடுக்கிட்டு...
விஷ்ணு சித்தர்: “கண்ணெனப் பத்தியா...அவன் செஞ்ச சேட்ட கொஞ்சமா நஞ்சமா...சொல்றேன்
கேளு கோந்தே”
என்று அவன் வரலாற்றை மட்டும் கூறித் தப்பித்துக் கொள்ளலாம் என்று யோசிக்கிறார்.
பாவம் அவரால் எப்படி அந்த உலகளந்த உத்தமனை விளக்கிவிட முடியும்...? அவன்
தான் யாருக்கும் விளங்காத விசித்திரன் ஆயிற்றே!
கோதை: “ம்ம்...ம்ம்... சொல்லுங்கோ ப்பா....சீக்கிரம்”
என்று ஆர்வமாய்
முதுகுத்தண்டு நேரே நீமிர, ஆடாது அசையாது கவனத்தோடு அமர்ந்து கேட்க ஆயத்தமாகிறாள் கோதை...
விஷ்ணு
சித்தரும் கண்ணன் லீலையைக் கண்ணன் கூத்து என்று சொல்லிப் பாடுகிறார்.
பாவம் இருவருக்குமே அந்தப் பாடலால் என்ன நேரப் போகிறது என்று
தெரியாது. தெரிந்திருந்தால், அவரும் பாடியிருக்க மாட்டார்...இவளும் அதிலே
கண்ணனின் குணங்களால் ஈர்க்கப்பட்டு “மானிடருக்கு நான் மாலையிட நேர்ந்தால் மடிவேன்..மாலவனே
என் கணவன்” என்று சொல்லி அரங்கனாதன் அடி சேர எண்ணியிருக்கவும் மாட்டாள்.....
எதை யார் மாற்றுவது....? எல்லாம் அவன் நிகழ்த்தும் நாடகமன்றோ?.
விஷ்ணு சித்தர் பாடுவதாக உதித்த “கண்ணன் கூத்து”
எத்தனை நாடகம் ஆக்கிவைத்தான் அடி
ஏகாந்த நாயகன் கண்ணபிரான்!
அத்தனை யுஞ்சொல்லச் சொல்லுகிறாய் அதை
ஆனந்தக் கும்மியில் பாடுகிறேன்!
முன்னஞ் சிறையிலு தித்தானம்மா அவன்
முக்கண்ணன் மச்சுனன் அம்சமம்மா!
பின்னொரு வீட்டில் வளர்ந்தானம்மா அங்கே
பிள்ளைக் குறும்பும் புரிந்தானம்மா!
காளிங்க நர்த்தனம் ஆடிநின்றான் குழல்
காணத் தமுதமி சைத்துவென்றான்!
தோளினில் கோவர்த்த னக்கிரி யைத்தூக்கிக்
கொட்டும் மழையினில் காத்துநின்றான்!
கோபியர் ஆடை எடுத்தானம்மா அவர்
கோபமுங் கொள்ள நகைத்தானம்மா!
பாபியர் தம்மை வதைத்தானம்மா பூதப்
பாலினை உண்டவன் வீரனம்மா!
கம்சனின் ஆட்ட மடங்கிடவே எங்கள்
கண்ணன் புரிந்தன கேட்டிலையோ
தொம்சமென் றானத வன்நிலைமை எங்கும்
தோன்றிடும் சோதியெம் கண்ணனம்மா!
பாரதப் போரினில் வந்தானம்மா கீதை
பாருக்கெல் லாமவன் தந்தானம்மா
நாரத னாக கலகங்கள் காட்டியந்
நல்லவர்க் கேவாழ்வ ளித்தானம்மா!
புத்தியி லேயொரு சாணக்ய னானவன்
பூமியின் நாயகன் போர்புரியும்
சத்தியி லேவொரு சத்ரிய னானவன்
சாத்திரஞ் சொல்லிடும் தேவனம்மா!
நீதி நெறிகளு ரைத்தானம்மா அதை
நித்தம் குறும்பினில் சொன்னானம்மா
மாதவள் த்ரௌபதி கேட்டிடச் சேலையை
மான்னிட அள்ளிக் கொடுத்தானம்மா!
மார்கழி நானெனச் சொன்னானம்மா அவன்
மாதரைக் கொஞ்சிடுங் கள்ளனம்மா!
தார்மலர் மாலையைக் கட்டுகிறேன் அதைத்
தன்னருந் தோளினி லேற்பானம்மா!
பீலியைச் சூடி நடப்பானம்மா ஊரைப்
பித்தர்க ளாக்கிச் சிரிப்பானம்மா
வாலிபம் கொஞ்சிடும் மார்பனம்மா அவன்
வாலுத் தனங்களின் ராஜனம்மா!
அர்ஜுனன் போற்றிடும் தோழனம்மா எழில்
அச்சுதன் கண்ணன் அழகனம்மா
சர்வத்திலும் மிக வல்லவன் தான் விழி
ஜாடைக் கவிதைகள் சொல்பவன்தான்!
வெண்ணெயை யுண்டிடுங் கண்ணபி ரானவன்
வேத விளங்கங்கள் சொன்னபிரான்
பெண்ணெழில் கோதையே கேட்டாயோ அவன்
பேரெழில் காதலன் உண்மையம்மா!
அடடே...இப்பேர் பட்ட ஆடவன் மீது எந்தப் பெண்ணுக்குத் தான்
காதல் மலராது?
அவனாலேயே கோதை ஆண்டாள்
ஆனாள்! கோபாலன் சூட வேண்டிய மாலையைப் பூண்டாள் ஆனாள்! அவனன்றி மானிடரைத்
தமக்கு வேண்டாள் ஆனாள்! பிரவாகமாக மல்லாண்ட மணிவண்ணனுக்கு மாலையிட்டு
வைகுந்தம் சென்று யாராலும் தீண்டாளாய்...எல்லாரையும் ஆண்டு நிற்கிறாள்!!
-விவேக்பாரதி
19.12.2016
Comments
Post a Comment