நான் தெரிவேன்

எனது பள்ளித் தோழர்களின் வாட்ஸாப் க்ரூப்பில் அவர்களுக்காக எழுதியது...


பள்ளிக் காலம் போல
பருவக் காலம் ஒன்று
கேட்டாலும் கிடைப்பதில்லை! 


நம் உறவுகளை எல்லாம்
எண்ணிப் பார்க்கின்றேன்!

ஒருவர் முறைக்க
ஒருவர் இளிக்க
இருவர் மூவர்
கூட்டாக நடக்க,

அர்த்தம் அறியாமல் இருந்த
அடலசன்ஸ் வயதில்
ஆர்மோன் அட்டகாசத்தில்
பலியாய்க் கிடக்க,

நட்பு
பிரிவு
கோபம்
சண்டை
பாசம்
காதல்

என்று எல்லா நிலைகளும்
பஸ்டாப் போல
வந்து வந்து போக
அவரவர் அங்கங்கே
இறங்கியும் ஏறியும்
இடம் மாறி அமர்ந்தும் வர

நமது நல்ல பள்ளிக் காலத்தை
நாவாரப் பேசிப் பார்க்கிறேன்!

முதன்முறை கட்டடித்த வகுப்பு
முதன்முறை பேசிய கெட்டவார்த்தை
முதன்முறை பரப்பிய கிசுகிசு
முதன்முறை அடித்த, அடிவாங்கிய தழும்பு

இன்னும் நீங்காமல்
தொட்டுக் கொள்ள மட்டுமே முடியும்
நினைவுகளாக!

அட!
இந்தக் காலம் நம்மை
எப்படியெல்லாம் செய்து விட்டது!

நண்பர்களே இரு கணம்
இதைப் படித்ததும்
கண்கள் மூடிக்
கனவுக்குள் ஓடுங்கள்!

அங்கே நான் தெரிந்தால்
உங்கள் கண்களிலும்
துளிகள் கசியும்!
எனக்குக் கசிவதைப் போல்!

இப்படிக்கு
உங்கள் தோழன்

-விவேக்பாரதி
22.01.2018

Comments

Popular Posts