தை வரவு

தைவர வாலே தமிழரின் நெஞ்சில்
       தாராளக் கொண்டாட்டம்
   தன்மையெல் லாம்வர தர்க்கமெல் லாமற
       தந்திமி என்றாட்டம்
மெய்வர வேண்டும் மனங்களும் உண்டு
       மேல்வர எண்ணமுண்டு
   மென்மை அடிகளும் சின்ன வழுக்களும்
       மேற்செய ஆசையுண்டு!
கைவர வேண்டிக் கணக்கிட் டிருக்கும்
       கனவுகள் கோடியுண்டு!
   கனவுக ளுக்குள் கற்பனை நிலைக்கக்
       காட்சி முகிழ்வதுண்டு!
நெய்வரும் பொங்கல் நிறைத்திட வைத்தே
       நின்னை அழைத்திருப்போம்
   நிம்மதி யோடு நிஜத்தினை எங்கள்
       நினைவில் இழைத்திருப்பாய்!


புத்துடை இட்டோம் புதுமைகள் செய்தோம்
       புழுதி நிலம்துதித்தோம்!
   புல்லுணும் மாட்டைக் கடவுளென் றாக்கி
       பூஜை இயற்றுகின்றோம்
நித்தம ழுத்தும் மார்கழி குளிரை
       நீட்டி உதறிவிட்டோம்
   நீவரும் நேரம் நித்திலப் பந்தல்
       நிலைகளெ லாம்சமைத்தோம்
சுத்த மிருக்கும் எங்கள் மனத்தில்
       சுற்றிடும் எண்ணத்திலும்
   சுண்டு விரல்பதம் மெல்லப் பதித்திடச்
       சுடருடன் வாஅழகே
இத்தனை நாட்கள் யாம்செய்த தவத்தில்
       ஈண்டு பிறந்தவளே
   இன்பப் பொங்கலாய் இங்கு பொங்கிடும்
       இனிய தைமகளே!!

-விவேக்பாரதி
14.01.2018

Comments

Popular Posts