கம்பனில் ஓர் உயிர்ச்சொல்

 Image result for கம்பன்


"கவிப்போம்" என்ற குழுவில், இருவர் ராமனைப் பற்றி எழுத, நான் ஒரு கருத்தில் இன்று "ராமாயண அரங்கேற்றமா?" என்று கேட்க மறுபக்கம் நான் இந்தப் பாடலையும்  இன்று படிக்க நேர்ந்தது.

அப்பப்பா....விறுவிறு என்று சென்று கொண்டிருக்கும் தனது கதையின் நடையில் எப்படி ஒரு விருத்தத்தைத் தூக்கிப் போட்டிருக்கிறான் பாருங்கள் அந்த "விருத்தமெனும் ஒண்பாவிற் குயர் கம்பன்". சொக்கிவிட்டேன்!!
யுத்த காண்டம். அதுவும் இரணியன் வதைப் படலம். செருக்கின் மிகுதியால் அறிவிழந்து பேசிக்கொண்டு இருக்கும் இராவணனுக்கு நாரணனின் பெருமையை எடுத்துச் சொல்ல வீடணன் இரணியன் வதைக்கப்பட்ட படலத்தைக் கூறுகிறான். முதலிலிருந்து அடுக்கிக் கதை நீளாமல் சுருக்கியும் வளர்த்தும் அளவாகச் சொல்லிக்கொண்டே வந்த கம்பர் ஓரிடத்தில் அதிசயத்தின் அதிசயமாய் விரிந்து நிற்கிறார். 

இறுதிக் கட்டம். பிரகலாதனுக்கும் இரணியனுக்கும் பேச்சு வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் தூண் ஒன்றினை ஓங்கி இடித்து "நல்லது உன் கடவுளை இங்கே பார்க்க முடியுமா?" என்று சிரித்துக்கொண்டே இடிக்கிறான். அவன் சிரிப்பு சத்தத்தை விடப் பெரிதாக அந்தத் தூணுக்குள் இருந்து சிங்கம் ஒன்று சிரிக்கிறது. அந்த ஒலியைக் கேட்டுப் பிரகலாதன் மனம் குளிர்கிறது. உடனே "யாரடா சிரித்தாய்? நீ தான் அரியா?" என்று ஏளன வசனம் பேசத் தூணை விட்டுப் பிளந்து கொண்டு நரசிங்கன் வெளிப்படுகின்றான்.
அடடா! இவ்விடத்தில் கம்பன் கையாண்டிருக்கும் ஒற்றை விருத்தம், அவன் அதிசயங்களில் ஒன்று. அப்படிப் பிளந்து வந்த தூணில் இருந்து வெளிப்பட்ட பிறகு என்ன நேர்ந்தது?? பதவுரையே தேவைப்படாத இந்த எளிய பாடலைக் கீழே பாருங்கள்...  

‘பிளந்தது தூணும்; ஆங்கே
    பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்;
    பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது;அப் புறத்துச் செய்கை
    யார்அறிந்து அறைய கிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை
    கிழிந்தது கீழும் மேலும்....

ஆர்வம் தாங்கவில்லை...நானும் கொஞ்சம் பொருள் சொல்ல முனைகிறேன்.
தூண் பிளந்தது, அங்கே சீயம் (சிங்கம்) பிறந்தது. பின்னை வளர்ந்தது,
திசைகள் எட்டோடு சேர்ந்து அண்ட பகிரண்டம் அத்தனையும் அளந்தது,
அதற்கு பின்? யார் அறியக் கூடும்? கிளர்ச்சி கொண்டது அந்தச் சிங்கம், கிளர்ந்து, மேலும் கீழும் ககனம் (வானம் (எ) உலகம்) எனப்படும் முட்டையைக் கிழித்தது. இதில் "ககன முட்டை" என்பதே எனக்கு உயிர்ச்சொல்லாகப் படுகிறது. இயல்பாகவே ஒரு கவிதைக்கு ஒன்றே உயிர்ச்சொல்லாக இருக்கக் கூடும். இக்கவிதைக்குக் "ககன முட்டை" என்பதே உயிர்ச்சொல். அது உயர்ச்சொல்லாகவும் கொள்ளலாம், அதை எண்ணிப் பார்த்தால் எத்தனை விளக்கங்கள்? 

மேலே ஏழு, கீழே ஏழு என்று பதினான்கு அடுக்குகளைக் கொண்டதாக இவ்வுலகைப் புராணங்கள் வரையறுக்கின்றன. இந்த பதினான்கு அடுக்குகளும் ஓடாகப் பாதுகாக்கும் கருப்பொருள் நாம் வாழும் பூமி. இப்பெருந் தத்துவத்தை எளிமையாக சொன்னான் கம்பன்! "ககன முட்டை" என்று...அடடா! 

ஓருணர்ச்சிப் பிரவாகமாகக் கதையை விரிக்கும் அழகில் ஆழ்ந்த தத்துவத்தையும் தமிழரின் அன்றைய விண்ணியல் அறிவையும் போகிற போக்கில் தூவிவிட்டுச் சென்ற கம்பன் "கவிச்சக்ரவர்த்தி". 

-விவேக்பாரதி
29.01.2018

Popular Posts