இளைஞர் இலக்கியம்


இலக்கியத்தில் இளைஞர்கள் ஈடு பட்டே
    இருக்கின்ற இன்பமெலாம் துய்க்க வேண்டும்!
பலவித்தை கற்றுவரும் அறிவை எல்லாம்
    பாடல்வழி ஊற்றிவைத்து முன்னோர் தந்த
இலகுவான இலக்கியங்கள் மனித வாழ்வை
    இனிதான பாதையிலே நடத்திச் செல்லும்!
உலகத்தார் இதையுணர்தல் வேண்டும்! எங்கும்
    உயர்வான இலக்கியத்தைப் பரப்ப வேண்டும்!

காதலுக்குத் தூதுசொலும் நளவெண் பாவைக்
    கற்பனைக்கு ளடங்காத கம்பன் பாட்டை
மோதலுக்கு முற்றுவைத்த மேக லையை
    மொத்தவறி வூட்டுகின்ற அறநூல் தம்மைச்
சேதமறு மெய்ஞானம் தன்னை யள்ளிச்
    செப்புகின்ற பிரபந்தத்தை திருமு றையை
ஓதுகிறார் இளைஞரெனும் செய்தி காதில்
    ஒருபொழுதும் நிற்காமல் கேட்டல் வேண்டும்!

காவியத்தில் இல்லாத சுவையா? பாடும்
    கவிதையிலே கிட்டாத போதை யாமோ?
பூவிரியும் செய்தியிலே துவங்கி இந்தப்
    பூகோளச் சாத்திரமும் வீணில் போமோ?
காவிரியைக் கனித்தமிழைப் பாடி வைத்த
    கற்பனையர் சொற்பதம்போல் இனிமை உண்டோ?
மேவியதைக் கற்பமென இளைஞர் நாளும்
    மேலான பேச்சுரைகள் பேசல் வேண்டும்!

இலக்கியத்தால் மனவன்மை வளரக் காண்போம்!
    இலக்கியத்தால் நேர்மைவழி பற்றல் திண்ணம்!
இலக்கியத்தால் இன்பமொரு கோடி சூழும்!
    இலக்கியத்தால் நமதுபுகழ் யாண்டும் வாழும்!
கலக்கமுறும் பொழுதுகளில் கவலை மாளும்!
    கற்கின்ற பொழுதெல்லாம் கவிதை நேரும்!
விலக்கியதை வெருட்டுவதால் நட்ட மென்றே,
    விசைமிகுந்த இளைஞர்சொலும் காட்சி வேண்டும்!

அகவளமை புறத்திண்மை அமைவ தற்கும்,
    அழியாத உற்சாகம் அசைவ தற்கும்,
நிகழ்காலம் எதிர்காலம் புரிவ தற்கும்,
    நிலையான தெதுவென்று தெளிவ தற்கும்,
வகையாக முன்னோர்கள் வாழ்த்தித் தந்த
    வளமான பலவரிகள் அடங்கு மந்த
முகவரியாம் இலக்கியத்தை இளைஞர் கற்பின்
    முழுவளமை எய்துவது திண்ண மாமே!!

-விவேக்பாரதி
10.07.2017

Comments

Popular Posts