எல்லோரும் கொண்டாடுவோம் - பைந்தமிழ்ச்சோலை விழியக் கவியரங்கம் 01

சோலையின் இணைய விழியக் கவியரங்கம்
தலைப்பு : எல்லோரும் கொண்டாடுவோம்
தலைவர் : மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

கடவுள் வாழ்த்து
(நேரிசை வெண்பா)


வேலால் மொழிதந்து வேண்டும் பதம்தந்து
சூலா யுதங்கொண்ட சுந்தரியே - ஆலால
முண்டவனின் பாதியே ஆசையால் பாலகன்
விண்டதில் காப்பை விதை! 4

தலைவர் வாழ்த்து & அவையடக்கம்
(கட்டளைக் கலித்துறை)


மரபு கவித்தேர் மகிழ்வுடன் ஏறி வலம்புரியும்
வரத னவர்க்கென் வணக்கமும் வாழ்த்தும்! வளக்கவிகள்
திரளு மிடத்தில் சிறியவன் பாடலைச் சிந்துவதோ
அரசி னிடத்தில் அமைதனி யார்செயும் ஆட்சியதே! 4

எல்லோரும் கொண்டாடுவோம்
(வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா)



தரவு

பெருவெடிப்பில் உருவான பேரண்டத் துகள்பூமி
உருவத்தால் செழுமைகளால் உள்ளேந்தும் அற்புதங்கள்
வரமெனவே வாய்த்ததனால் வளமாக எல்லோரும்
உரிமையுடன் கொண்டாடி உள்ளமிக மகிழுவமே! 4

தாழிசை

கொண்டாடத் தான்பூமி கோலமிகு பூப்பூத்து
வண்டாட வைக்கின்ற வனப்பெல்லாம் செய்கிறது! 6

கொண்டாடத் தான்மரமும் கொழுந்திலைகாய் கனிதந்து
மண்ணுக்குள் விதைபோட்டு மடிநிறைய வைக்கிறது! 8

கொண்டாடத் தான்கடலும் கொள்ளையெழிற் பவளங்கள்
கொண்டுவந்து குவித்திங்கு கொலுவைக்கப் பார்க்கிறது! 10

வண்ணகம்

எழிலுறு புவிமக ளெழுதிடும் வளிகவி, 
பொழிநறு மருவியும், பொலிவுரு மலைகளும்,
கழையிசை, மழைநடை, கருமுகி, லசையொலி,
எழுகதிர், நிலவொளி, எரிதழல், கனிவகை, 14

பேரெண் (நாற்சீரீரடி இரண்டு அம்போதரங்கம்)

யாவும் கொண்டாட யாரும் கொண்டாட
மேவும் இயற்கையில் மேனி திண்டாட!
தாவும் விலங்குகள், தத்தும் பூச்சிகள்,
கூவும் பறவைகள், குட்டிப் பனித்துளி, 18

அளவெண் (நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் நான்கு)
எல்லாம் மனிதர் எழுந்து வியந்தே
எப்போ துங்கொண் டாடி மகிழ்ந்தே
சொல்லாற் புகழ்ந்து மனத்தால் நினைந்து
சொக்கக் கிடைத்த சொர்க்கம் புவியே! 22

இடையெண் (முச்சீர் ஓரடி அம்போதரங்கம் நான்கு)

வஞ்சம் பொறாமை இல்லாமல்
வாழ்வோம் அனைவரும் ஒன்றாக
நெஞ்சம் இனிக்கக் கொண்டாடி!
நெகிழ்வோம் நாளும் பண்பாடி! 26

சிற்றெண் (இருசீர் ஓரடி அம்போதரங்கம் எட்டு)

இந்தப் புவியில்,
இன்பத் திடலில்,
செந்தேன் மலர்கள்
சிரிக்கும் வெளியில்,
எத்தனை அழகை
இறைவன் படைத்தனன்
அத்தனை அழகும்
அனுப வித்துநாம், 30 
 
தனிச்சொல்

எல்லோரும்

சுரிதகம்

கொண்டா டித்தான் குணமுற வாழ்வோம்!
எண்டிசை புகழ எழுவோம்!
பண்டிகை, நாளும் பார்த்திடு வோமே! 33

-விவேக்பாரதி
30.12.2017


Comments

Popular Posts