களி மதுரம்
(கம்பன் சந்தத்தில் காதலி வர்ணனைக் கவிதை எழுதச் சொன்ன போட்டிக்கு எழுதிய கவிதை)
தொடுபேசியின் ஒளிநேர்முகம் விழியோகருந் துளைகள்!
இடைநாடுறும் அரசாள்பவர் மனமேயன வளைவு!
திடலாய்வரு முயர்மாணவர் திரளேயெனக் குழலும்!
அடடாவிவள் நடையோவயல் நடமாடிடும் பயிரே!
நிலவாய்நிறம் உளமேகொளும் நிழல்கூடவு மழகு!
மலர்வாயெழில் நுனிநாசியி ளொளியாடுத லழகு!
சிலைமேனியள் முலைமேலெழு மெழிலாடையு மழகு!
உலைபோலிவள் நினைவேயுற மனமாகிடும் மெழுகு!
கன்னத்தெழும் கிண்ணக்குழி கன்னல்தரும் ரசமும்!
சின்னக்கரம் அங்கத்துகிர் வண்ணத்தெழில் பரவும்!
மென்மைப்பதம் தங்கத்திரள் கொஞ்சக்கலை அணிகள்!
என்னைத்தொட நெஞ்சைச்சுட முன்னிற்கிற பருவம்!
அங்கத்திடை தங்கத்துணி சந்தத்திடை நளினம்!
சங்கத்தமிழ் வர்ணித்திட வந்திப்பெணை எழுதும்!
மங்கைக்குயர் மங்கைப்பர நங்கைக்குறும் வடிவம்!
இங்குற்றவள் ரம்பைக்குயிர் வம்பைத்தரும் பதுமை!
கட்டித்தொழ முத்தக்கலை வித்திட்டிட மனதும்,
முட்டித்துய ரெட்டித்தினம் பித்துப்பிணி அடையும்!
குட்டிச்சிலை மொட்டுக்கனி மொத்தக்களி மதுரம்!
சொட்டுத்துளி கிட்டக்கதி பக்கத்துறும் நிசமே!!
-விவேக்பாரதி
01.01.2018
Comments
Post a Comment