இயற்கை இனிது


பொதிகைமலைத் தென்றல்வழி புறப்பட் டாயாம்
   புலவர்திரு நாவினிலே வளர்ந்திட் டாயாம்
பொதுவுடமை மக்களிடை செழித்திட் டாயாம்
   பூரணமாய்ப் பக்தியிலே நிலைத்திட் டாயாம்
புதுக்கவியில் தளையுடைத்து நடந்திட் டாயாம்
   புன்னைமர நிழலெனவே திகழும் அம்மா
எதுதந்துன் அன்பைநான் பெறுவேன்? சிந்தை
   எங்குநிறை தமிழேநீ வாழ்க வாழ்க!

எந்தப்பா என்றாலும் கொஞ்சும் வண்ணம்
   எழுதும்பா வலரெங்கள் சியாம ளாம்மா!
சந்தப்பா எனத்துள்ளும் சாத கப்பா
   சந்தோஷப் பா!செம்பா! கட்ட ளைப்பா!
முந்தப்பா எனவூக்கும் முனைப்பு டைப்பா!
   முத்துப்பா! வித்துப்பா! முளைகனிப்பா!
அந்தப்பா வலர்தலைமை ஏற்ற மன்றில்
   அன்புப்பா லருந்தியவன் பாட வந்தேன்!

இனிதினிது இனிது இனிதினிது இனிது
   இனிதிந்த சொற்கள் இனிது
இயல்பாகத் தன்னை இறைதந்த தோற்றம்
   இயற்கையே என்றும் இனிது!
இனிதிந்த மனிதம் இனிதிந்த சுற்றம்
   இனிதிந்த இதயம் இனிது
இதயத்துள் வாழும் நம்பிக்கை இனிது
   இனிதிந்த ஞானம்  இனிது!

மலர்ச்சத்தம் இனிது வண்டினொலி இனிது
   மயக்கிடும் நீரும் இனிது
மழைவானம் இனிது மணல்வாசம் இனிது
   மழைக்காலத் தென்றல் இனிது
உலைச்சூடும் இனிது உணவுகளும் இனிது
   உண்டாகும் மணமும் இனிது
உணர்ச்சிக்குள் ஆடும் காதல்கள் இனிது
   உயர்ந்தவான் மீகம் இனிது

இனிதினிது இனிது இனிதினிது இனிது
   இனிதிந்த சொற்கள் இனிது

கலையாவும் இனிது கவிதைகள் இனிது
   காலைச்செவ் வானம் இனிது
கன்றுகளும் இனிது காளைகளும் இனிது
   கடன்செய்யும் பசுவும் இனிது
அலைகடலும் இனிது அதில்சிப்பி இனிது
   அசைந்தாடும் நாணல் இனிது
அசைக்கின்ற காற்றும் அலைகின்ற மண்ணும்
   ஆங்கோடும் நண்டும் இனிது

இனிதினிது இனிது இனிதினிது இனிது
   இனிதிந்த சொற்கள் இனிது

பூக்கள்மிக இனிது புட்கள்மிக இனிது
   பூமத்ய ரேகை இனிது
புலாங்கு ழல்செய்ய துளைபட்ட மூங்கில்
   புரிகின்ற நாதம் இனிது
காக்கையினம் இனிது கழுகுகளும் இனிது
   கானம்தரும் குயிலும் இனிது
காட்டுக்குள் தாவும் குரங்குகள் இனிது
   கரியானை புலிகள் இனிது!

இனிதினிது இனிது இனிதினிது இனிது
   இனிதிந்த சொற்கள் இனிது

*
உலகம் பிறந்த நாள்முதலாய்
   உருவில் வளர்ந்து மிகவினிதாய்
இலகும் இயற்கைத் தெய்வத்தை
   இனிமை என்றே போற்றுகிறோம்.
பலவும் அணிந்த ஓருருவம்
   படைத்தோன் வகுத்த பிரதிபிம்பம்
புலவர் கவிதைக் கொருநட்பு
   பூமி இயற்கை இனிதினிது!

ஒற்றைக் காலில் தவம்செய்யும்
   உயரக் கொக்கின் திறமினிது
ஒளிந்தே அதனில் தப்பிக்கும்
   உருவில் சிறிய மீனினிது
கற்றைக் கூந்தல் காற்றோடு
   கழற்றி ஆடும் மரமினிது
கணக்காய் அதனில் பொந்திட்டுக்
   கவிதை பேசும் புள்ளினிது

நெல்லின் நாணம் மிகவினிது
   நெளியும் புற்கள் இனிதினிது
நேற்றை நினையா மலர்வகையின்
   நெகிழ்ச்சி இனிது மகிழ்வினிது
கல்லில் முளைக்கும் வேரினிது
   கல்லைக் கரைக்கும் நீரினிது
காணும் பச்சை வெளியினிது
   கவினாய்ப் பாயும் மடையினிது

மலையும் பின்னால் மரங்களுமாய்
   மழலை மொழியும் பெரும்பொருளாய்
மாறாக் காலப் பயணங்களாய்
   மண்ணில் வாழும் புழுவினமாய்
இலையும் அதிலே உணவுசெயும்
   இயக்க முறையும்  முகில்காதல்
இடியின் பெயரில் முழங்குவதும்
   இயற்கை சேர்க்கும் இனிமையன்றோ!

இனிமை இனிமை இனிமையென
   இங்கே பேசி பிறகதிலே
இழுக்கை அழுக்கை இரைப்பதெலாம்
   இதயம் அற்ற அரக்கசெயல்!
மனிதர் என்றால் நமக்கிறைவன்
   வரமாய் அளித்த இயற்கையினை
மனம்போல் காத்துப் பின்னர்வரும்
   மைந்தர்க் களித்தல் கடனன்றோ!!

-விவேக்பாரதி
29.08.2019

Comments

Popular Posts